முல்லை பெரியார் அணை வரலாறு
1790 மார்ச் 6ல் மதுரை மாவட்டம் உதயமானது. ஏப்.5ல் முதல் கலெக்டராக ஏ. மிக்லட் நியமிக்கப்பட்டார். 1798ல்இராமநாதபுரம் மன்னர் சேதுபதி, முல்லை, பெரியாறு நதிகளை இணைத்து அணை கட்டி தண்ணீர் முழுவதையும்மதுரை, இராமநாதபுரம் பகுதிக்கு கொண்டு வர திட்டமிட்டார்.
இதற்காக முத்து இருளப்பபிள்ளை தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவை மேற்கு தொடர்ச்சி மலைக்கு அனுப்பினார். அந்த குழு தங்கி காடுகளை அழித்து, அணை கட்டும் இடத்தை தேர்வு செய்து மதிப்பீடு தயார் செய்தது. நிதி வசதியின்றி திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை என ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 1807ல் மதுரை கலெக்டர் ஜார்ஸ்பேரிஸ், மேற்கு தொடர்ச்சி மலைக்கு சென்று பெரியாறு அணை கட்ட திட்டமிட்டுள்ள இடத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்ய மாவட்ட பொறியாளர் ஜேம்ஸ் கார்டுவெல்லுக்கு உத்தரவிட்டார்.ஆனால் 1808ல் நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம் என கார்டுவெல் அறிக்கை தந்தார். 1837ல் கர்னல் பேபர் சின்னமுல்லையாறு தண்ணீரை மண் அணை மூலம் திருப்பும் பணியில் ஈடுபட்ட போது, வேலையாட்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டதாலும், கூலி அதிகம் கேட்டதாலும் பணி நடக்கவில்லை என்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 1867ல் மேஜர் ரைவ்ஸ் என்பவர் தண்ணீரை கிழக்கே திருப்புவதுதான்
முக்கிய நோக்கம் என்று 17.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டாலான அறிக்கை சமர்ப்பித்துள்ளார். மேற்குத் தொடர்ச்சி மலையின் காடுகளில் உருவாகி அரபிக்கடலில் சென்று வீணாகக் கலந்து கொண்டிருந்த பெரியாறு நீரைப் பயன்படுத்த அன்றைய ஆங்கிலேய அரசு முடிவு செய்து அந்தப்பகுதியில் அணை ஒன்றைக் கட்டத் தீர்மானித்தது. பெரியாற்றின் குறுக்கே மண் அணை அமைத்து அந்த ஆற்றின் நீரைக் கிழக்குப் பக்கமாகத் திருப்புவதற்கான வரைவுத் திட்டம் ஒன்றை சுமித் என்கிற ஆங்கிலேயர் தயார் செய்தார். இந்தத் திட்டத்திற்கு தலைமைப் பொறியாளராக இருந்த வாக்கர் என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இந்த அணைத் திட்டம் நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டது. மேலும் 1876 ஆம் ஆண்டில் சென்னை மாகாணம் கடுமையான பஞ்சத்தால் பாதிக்கப்பட்டதால் இந்த அணைத்திட்டம் மேலும் காலதாமதம் ஆனது.
ஆங்கிலேய அரசின் ஆணைப்படி மேஜர் ஜான் பென்னிகுயிக் என்பவர் 1882-ல் அணையைக் கட்டுவதற்கான திட்டத்தைத் தயாரித்தார். இத்திட்டத்தின்படி ஆற்றின் அடிப்பகுதியிலிருந்து 155 அடி உயரமும், ஆற்றின் தளத்திற்கு கீழே 18 அடி ஆழமும் அணையின் மேல் 4 அடி அகலத்தில் 5 அடி உயரக் கைப்பிடிச்சுவர் ஒன்றும் கட்ட முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்தின்படி அணையை அடைத்துத் தேங்கியிருக்கும் தண்ணீரை எதிர்ப்புறத் திசையிலிருந்து வாய்க்கால் வழியே கொண்டு வருவது என்றும் இந்த வாய்க்காலின் நீளம் 6500 அடியாகவும் இதற்கான் தலைமை மதகின் தரை மட்டம் 109 அடி என்றும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் இங்கிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதிக்குத் தண்ணீரைக் கொண்டு செல்ல மலையினுள்ளே 5900 அடி வரை சுரங்கம் அமைத்து இதன் வழியே வைரவன் ஆற்றில் கலந்து அப்படியே அதைச் சுருளி ஆற்றில் கலந்து வைகை ஆற்றுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இராணுவப்பணிப் பொறியாளராக இந்தியாவிற்கு வந்தவர் கர்னல் பென்னி குக் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பெரியாறு என்ற ஆறாக ஓடி வீணாகக் கடலில் சென்று கலப்பதைப் பார்த்து இதன் குறுக்காக ஒரு அணையைக் கட்டி மலையின் வடக்குப் பகுதிக்குத் திருப்பி விட்டால் வறண்டுள்ள நிலங்கள் பயனுள்ள விளைநிலங்களாக மாறிவிடும் என்று திட்டமிட்டார். இதற்கான திட்டத்தை ஆங்கிலேய அரசின் பார்வைக்கு வைத்து அனுமதி பெற்றார். எழுபத்தைந்து இலட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 1895 ஆம் ஆண்டில் அக்டோபர் 11 ஆம் தேதியில் அப்போதைய சென்னை மாகாண அரசின் கவர்னர் வென்லாக் முன்னிலையில் அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னி குக் தலைமையில் பிரிட்டிஷ் இராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டது. அடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், காட்டு யானைகள், காட்டு மிருகங்கள், கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாறு போன்றவைகளையும் பொருட்படுத்தாமல் மூன்று ஆண்டுகள் பல்வேறு கஷ்டத்துடன் அணை பாதி கட்டப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையினால் உருவான வெள்ளத்தில் கட்டப்பட்ட அணை அடித்துச் செல்லப்பட்டது. அதன் பிறகு இந்தத் திட்டத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேய அரசு மறுத்த நிலையில் கர்னல் பென்னி குக் இங்கிலந்திற்குத் திரும்பிச் சென்று தன் குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வந்து சொந்தமாகவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார். இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை,சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டப்பகுதி நிலங்களுக்குத் தேவையான் தண்ணீர் இன்றும் கிடைத்து வருகிறது.
தன் குடும்ப சொத்தை விற்று அணை கட்டிய கர்னல் பென்னி குக் எங்கே ?
இன்று சுயநலத்துக்காக அரசியல் பண்ணும் அரசியல்வாதி எங்கே?
0 comments :
Post a Comment