பொங்கலுக்கு மட்டும் கருவறை திறக்கும் அதிசய கோவில்

Saturday, 14 April 2012

பொங்கலுக்கு மட்டும் கருவறை திறக்கும் அதிசய கோவில்


தினமலருக்கு அடுத்த படியாக தமிழகத்தின் முக்கிய கோவிலை உங்களுக்கு அறிமுக படுத்துவதில் பெருமை அடைகிறேன்.  சிவனின் அருள் உங்கள்ளுக்கு கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் . ஓம் நமசிவய போற்றி!

பட்டுக்கோட்டை அருகே பரக்கலாக்கோட்டை மத்தியபுரீஷ்வரர் கோவில் கருவறை பொங்கல் திருநாளில் மட்டுமே திறந்து வழிபாடு நடத்தப்படுகிறது.
பட்டுக்கோட்டையிலிருந்து முத்துப்பேட்டை செல்லும் வழியில், பரக்கலாக்கோட்டை மத்தியபுரீஷ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் தல வரலாறு சற்று வித்தியாசமானது.இங்கு வசித்து வந்த வான்கோபர், மஹாகோபர் என்ற இரண்டு முனிவர்களுக்கிடையே, இல்லறம் சிறந்ததா? துறவறம் சிறந்ததா? என விவாதம் ஏற்பட்டது. இருவரும் அவரவர் நிலையில் பிடிவாதமாக இருக்கவே, இருவரும் சிதம்பரம் நடராஜரிடம் தங்கள் விவாதத்தை முன்வைத்து முடிவு சொல்லும் படி கூறினர்.
அதை தொடர்ந்து, கார்த்திகை மாதம் நள்ளிரவு பூஜை முடிந்ததும், சிதம்பரம் நடராஜர், தன் பாரிவாரங்களுடன் பரக்கலாக்கோட்டையில் உள்ள வெள்ளை ஆலமரத்தின் அடியில் அமர்ந்து இரண்டு முனிவர்களுக்கிடையே ஏற்பட்ட சந்தேகங்களை கேட்டார்."ஒரு மனிதனின் வாழ்வில் அவரவர் நிலையில் இல்லறம் மற்றும் துறவறம் இரண்டுமே நல்லறமாக இருத்தல் அவசியம்' என நடுநிலையான தீர்ப்பு கூறி மத்தியஸ்தம் செய்து வைத்ததால் மத்தியபுரிஷ்வரர் என்றும், பொதுவான தீர்ப்பை கூறியதால் பொதுஆவுடையார் என்றும் அழைக்கப்பட்டார்.வெள்ளை ஆலமரத்தின் கீழ் அமர்ந்து தீர்ப்பு கூறியதால், அந்த வெள்ளால மரமே கோவில் தல விருட்சமாக வழிபடப்படுகிறது. 

ஆலமரத்தை தல விருட்சமாக கொண்டு, இக்கோவிலில் மட்டுமே வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த மரத்தின் அடியில் லிங்கம் போல் சந்தன அலங்காரம் செய்து, வழிபாடு நடத்துகின்றனர்.இந்த மரத்தின் முன் சிவன்பாதம் உள்ளது. சிவனின் குரு அம்சமான தட்சணாமூர்த்தி வெள்ளால மரத்தின் கீழ் காட்சி தருகிறார். 
இத்தலத்தை, குரு ஸ்தலமாகவும் கருதி வழிபடுகின்றனர். மரத்தின் இலைகள் பிரசாதமாக வழங்கப்படுகிறது.பக்தர்கள் அந்த இலைகளை தங்கள் இல்லங்களில் பூஜையறையில் வைத்து வழிபடுகின்றனர். கார்த்திகை மாதத்தின் திங்கட்கிழமைகளில் மட்டும் இரவு 10 மணிக்கு மேல் கருவறை திறக்கப்பட்டு, அலங்காரம் செய்து, கோயில் வளாகத்தில் உள்ள நந்தி, விநாயகர், பெத்த பெருமாள், மஹாகோபர் மற்றும் வான்கோபர் ஆகியோருக்கு பூஜைசெய்து முடித்த பிறகே நள்ளிரவு 12 மணியளவில் மூலஸ்தனத்திலுள்ள சிவனை தரிசிக்க முடியும்.சூரியோதயத்திற்கு முன்பு கருவறை சாத்தப்படும், மற்ற அனைத்து நாட்களிலும் கோவிலின் கருவறை கதவு சாத்தியே இருக்கும். முடிய கதவிற்கு மட்டுமே தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தப்படும். மகர சங்கராந்தியன்று, சூரியன் இங்கு வந்து சிவனை தரிசித்துவிட்டு தனது உத்ராயன பயணத்தை துவக்குவதாக ஐதீகம்.இதனை உறுதிப்படுத்தும் வகையில் பொங்கலன்று மட்டும் வெள்ளால மரத்தின் மீது சூரியக்கதிர்கள் படும். அதற்காக அன்று மட்டும் அதிகாலை முதல் மாலை ஏழு மணிவரை நடைதிறக்கப்பட்டு இருக்கும். மத்தியபுரீஷ்வரர் கோவிலில் பொங்கல் வைத்த பிறகே ஊரில் மக்கள் அனைவரும் பொங்கல் வைப்பது வழக்கம்.சமூலஸ்தானத்தில் ஸ்வாமி அருகில் கஜலெட்சுமி காட்சி தருகிறாள். சிவனே பிரதானம் என்பதால் அம்பிகையோ, வேறு பரிவார மூர்த்திகளோ கிடையாது. கோயிலுக்கு வெளியே மேற்கு நோக்கிய வீராதி விநாயகர் சன்னதி இருக்கிறது. வான்கோபர் அலங்காரத்துடனும், மஹா கோபர் துறவி கோலத்திலும் ஒரு புளிய மரத்தின் கீழ் சிலை வடிவில் இருக்கின்றனர்.

நன்றி: தினமலர் 

Reactions:

0 comments :

Post a Comment