தமிழ்ப்புத்தாண்டு
தமிழ்ப்புத்தாண்டு சித்திரை மாதம் (ஏப்ரல் 13) முதல் தேதி மிகவும் சிறப்பான நாள். அன்றைய தினத்தில் அதிகாலை எழுந்து குளித்து புதிய ஆடைகளை அணிந்து கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வர். எல்லா கோயில்களிலும் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெறும். சகல நற்காரியங்களையும், செய்வதற்கேற்ற காலம் இது. தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதம் முதல் நாளை கேரள மக்கள் கொன்னம்பூ வைத்து பூஜிக்கின்றனர்.
கேரளாவில்சித்திரை விஷுவன்று கனி காண்பது மரபு. பங்குனி கடைசி நாள் அன்று இரவு பூஜை அறையில் சுவாமி படங்களுக்கு பூச்சூடுவர். கோலமிட்ட மனைப்பலகையில் முகம் பார்க்கும் கண்ணாடி வைத்து இருபுறமும் குத்துவிளக்கு வைப்பார்கள். ஒரு தாம்பளத்தில் பூ, பழம், வெற்றிலைபாக்கும், இன்னொன்றில் கிண்ணங்களில் அரிசிபருப்பு, தங்க, வெள்ளிக் காசுகள், ஆபரணங்களும் வைப்பர். இன்னொரு தாம்பளத்தில் முக்கனிகளை வைப்பர். செவ்வாழை, நேந்திரம் வாழை, பலாப்பழம், கொன்றைப் பூச்சரம், தென்னம் பூ கொத்தும் வைக்கப்படும். மறுநாள் அதிகாலை வீட்டின் மூத்தவர் எழுந்து பூஜை அறைக்கு வந்து குத்துவிளக்கேற்றுவார். சுவாமியை வணங்கியபின் வீட்டில் உள்ளவர்களை வயதுப்படி கண்மூடிவரச் செய்து பூஜை அறையில் கண்திறந்து காண வைப்பதுதான் விஷூக்கனி காணல். பின் எல்லாருக்கும் காசு தருவார். இதை கை நீட்டம் என்பர். பின், அவரிடம் ஆசி பெறுவர். நீராடியபின் புத்தாடை அணிந்து கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்தபின் அறுசுவை உணவு உண்பர்.
குருவாயூர் கோயிலுக்கு முதல் நாள் இரவே சென்று காத்திருந்து அதிகாலை நடைதிறந்ததும் குருவாயூரப்பனைத் தரிசிப்பார்கள். ஆலயத்தில் கை நீட்டப் பணம் தருவதை ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமின்றி வாங்கிச் செல்வர்.
பஞ்சாங்கம் படியுங்க!
புத்தாண்டு அன்று முக்கியமாக செய்ய வேண்டியது புதுபஞ்சாங்கம் படித்தல். அன்று அதிகாலை நீராடியதும், சுவாமி அறையில் பஞ்சாங்கம் வைத்து அதற்கு பொட்டு, பூவைத்து பூஜை செய்ய வேண்டும். பஞ்சாங்கத்தை ஒரு தேவதையாக எண்ணி வணங்கி அனைவரும் கேட்கும் வண்ணம் வாசிக்க வேண்டும். பஞ்சாங்கம் ஐந்து அங்கங்களைக்கொண்டது. முதல் அங்கமான திதியை அறிவதால் லட்சுமியின் அருளும், இரண்டாவதான வாரத்தை அறிவதால் நீண்ட ஆயுளும், மூன்றாவதான நட்சத்திரத்தை அறிவதால் வினைகள் தீர்வதும், நான்காவதான யோகத்தை அறிவதால் நோயற்ற வாழ்வும், ஐந்தாவதான கரணத்தை அறிவதால் காரிய சித்தியும் உண்டாகும். பஞ்சாங்கங்களை கோயில்கள் சிலவற்றிலும் படிப்பர். ஆந்திராவில், பஞ்சாங்கம் வாசிப்பதை அரசு விழாவாகவே நடத்துவர். மாநில முதல்வர் அதிகாரிகள் முன் பஞ்சாங்கம் படிப்பார்.
0 comments :
Post a Comment