குரு பெயர்ச்சி பலன்கள் 2012 - 2013

Wednesday, 25 April 2012

குரு பெயர்ச்சி பலன்கள் 2012 - 2013



17.5.2012 வியாழன் மாலை 6.15 மணிக்கு குருபகவான் மேஷ இராசியில் இருந்து இருந்து ரிஷப இராசிக்கு கிருத்திகை நட்சத்திரதில் சூரியன் சாரத்தில் பெயர்ச்சியாகிறார்.

குரு மாறுகிற காலம், மீன இராசி – விருச்சிக லக்கினம். லக்கினத்தில் இராகு, 5-ல் சந்திரன், 6-ல் புதன், 7-ல் சுக்கிரன், குரு, கேது, சூரியன், 10-ல் செவ்வாய், 11-ல் சனி. அருமையான நேரம். பொதுவாக பஞ்சமஸ்தானம் – சப்தமஸ்தானம் – ஜீவனஸ்தானம் – லாபஸ்தானம் அருமையாக அமைய வேண்டும் அது அமைந்துவிட்டது. நாட்டுமக்கள் வளமோடு மகிழ்ச்சியோடு வாழ்வார்கள். பொருளாதரம் மேலோங்கும். 8-க்குரிய புதன், 6-ல் இருப்பதால், கல்விதுறை பல மடங்கு முன்னேறும்.
பல கல்வி நிறுவனங்கள் உருவாகும். சப்தமத்தில் கூட்டு கிரகம் இருப்பதால், விரோதிகள் வீழ்ச்சி அடைவார்கள். போதும் போதும் என்ற அளவுக்கு மழை பொழியும். சில இடங்களில் வெள்ள பெருக்கும் ஏற்படலாம். குருவும், கேதுவும் ரிஷபத்தில் இணைவது சாதாரண விஷயம் இல்லை. சாதாரண மக்களையும் செல்வந்தனாக்கிவிடும். நாட்டில் பல இடங்களில் தெய்வகாரியம், பூஜைகள் விசேஷமாக நடக்கும்.
7-ல் குரு – சூரியன், சுக்கிரனோடும், கேதுவுடனும் இணைந்து இருப்பதால் கடல்மார்க்கமாக இருந்து வரும் பிரச்னை தீர்வு பெறும். 10-ல்செவ்வாய் இருப்பதால் தொழில்துறையில் தமிழ்நாடு செழித்து வளரும். பவர்கட் எல்லாம் இனி குரு அருளால் நெவர் கட் (Never Cut) ஆகிவிடும். சிம்மத்தில் செவ்வாய் இருப்பதால் அரசாங்கத்திற்கு தலைவலியாக இருந்த பிரச்னைகள் அனைத்தும் அடங்கிவிடும். அரசாங்கம் செய்பவர்களுக்கு அதிகமான பலம் ஏற்படும். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தமிழ்நாடுக்கு அதிபதி செவ்வாய்.
செவ்வாய் கிரகபலத்துடன் இருப்பதால் பல நாடுகளுக்கு முன்னோடியாக – முன்னுதராணமாக தமிழ்நாடு திகழும். காவல்துறை மேலும் வலிமையும் முன்னேற்றமும் வசதிகளும் பெற்று நல்ல புகழ் அடையும். குரு பெயர்ச்சியின் லக்கினத்திற்கு 9-க்குரிய சந்திரன் 5-ல் இருப்பதாலும், அந்த சந்திரனை செவ்வாய் பார்வை செய்வதாலும், உயர்பதவிகளில் இருக்கும் பெண்களுக்கு இது யோகமான நேரம். ஆண்களுக்கு இல்லையா? என கேட்கலாம்.
பொதுவாக சந்திரன், பெண்களை குறிப்பிடும் கிரகம். அதேநேரம் சந்திரனை செவ்வாய் பார்ப்பதால் சந்திரமங்களயோகத்தை பெண்களுக்கு அதிகமாக வழங்குகிறார். ஆகவே பெண்களுக்கு அதிக சக்தியை – ஆற்றலை சந்திரனும், செவ்வாயும் வாரி வழங்குவர்.
உலக நாடுகளுக்கு என்ன பலன்
உலகில் பல நாடுகள் மழை வெள்ளத்தால் பாதிப்பு அடையும். இயற்கை சீற்றம் – பூகம்ப பாதிப்பு ஏற்படும். பல நாடுகளில் புரட்சி வெடிக்கலாம். மேலை நாடுகளில் உள்ள தலைவர்களுக்கு தலைவலியான நேரம். தேவை இல்லாமல் சண்டை சச்சரவு வரலாம். தீவிரவாதத்தால் பிரச்னைகள் வந்தாலும் அடங்கிவிடும்.
கேதுவும் – குருவும் – சுக்கிரனும் – சூரியனும் இணைந்து இருப்பதால் முக்கியமாக சுனாமி தாக்குதல் அல்லது தண்ணீரினால் பெரும் பாதிப்புகள் சில நாடுகளில் நடக்கலாம்.
புரியாத நோய் நொடிகள் மக்களை பாதித்தாலும், குரு அருளால் தீர்வு பெறும். ஆக ரிஷப குரு, சூரியனின் சாரம் பெற்று இருப்பதால்,
பல நாடுகளில் அரசாங்க மாற்றம் ஏற்படும். அவதிப்பட்ட சில நாடுகளின் மக்கள் குரு அருளால் நிம்மதி அடைவார்கள். கேதுவுடன் குரு சேர்ந்ததால், தங்கம் விலை மேலும் அதிரடியாக உயரும். ஆக இந்த 2012 -2013 குரு பெயர்ச்சி பலன்களை பார்க்கும்போது, 75%  நன்மையே – நன்மையே நன்மையே. வாழ்க வளமுடன்.
இப்போது உங்கள் இராசிக்குரிய குரு பெயர்ச்சி பலன்களை பார்க்கலாம் :-
மேஷம் : மே மாதம் 17-ம் தேதி குரு பகவான் உங்கள் மேஷ இராசிக்கு 2-ம் இடமான ரிஷபத்தில் அதாவது தன, குடும்ப வாக்கு ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 2-ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இது ஒரு அற்புதமான நேரமாகும். வாக்கு பலிதம் ஏற்படும். திடீர் தனவரவு வர வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சுபகாரியம் நிறைவேறும். திருமணம் தடைபட்டவர்களுக்கு தடை நீங்கி திருமணம் சிறப்பாக நடைபெறும். உங்கள் இராசிக்கு 6-ம் இடம், 8-ம் இடம், 10-ம் இடம் போன்ற இவ்விடங்களை குரு பகவான் பார்வை செய்கிறார்.
கடன்கள் அத்தனையும் தீரும். நோய் நொடிகள் அகலும். வழக்கு இருந்தால் சாதகமாக அமையும். விரோதிகளும் நண்பர்கள் ஆவார்கள். 10-ம் இடத்தை கரு பார்ப்பதால் உத்தியோக உயர்வு, புதிய தொழில் அமையும். அரசாங்க ஆதரவு வர வாய்ப்புள்ளது. முக்கியமாக புதிய முயற்சிகள் அமோகமாக வெற்றி பெறும். ரியல் எஸ்டேட், கலைத்துறை, ஐ.டி நிறுவனம் இவற்றில் ஈடுபடுபவர்கள் நற்பலன் அடைவார்கள். நினைத்ததை நிறைவேற்ற குரு 2-ல் அமர்ந்துவிட்டார். இனி உங்களுக்கு பொற்காலமே.
ரிஷபம் : மே மாதம் 17-ம் தேதி குருபகவான் ரிஷப இராசியில் அதாவது உங்கள் ஜென்மத்தில் அமர்கிறார். அங்கிருந்து பூர்வ புண்ணியஸ்தானம் என்கிற 5-ம் இடம், களத்திரஸ்தானம் என்கிற 7-ம் இடம், பாக்கியஸ்தானம் என்கிற 9-ம் இடம் போன்ற இவ்விடங்களை பார்வை செய்கிறார். பொதுவாக “ஜென்ம குரு நன்மை இல்லை” என்பார்கள். ஆனாலும் உங்கள் ரிஷப இராசிக்கு குரு பகவான், 8 மற்றும்11 இடத்துக்கு அதிபதி. இவர் ஜென்மத்தில் அமர்ந்து கேதுவுடன் சேர்ந்துவிட்டதால் நன்மையே செய்வார். சொத்துக்கள் வாங்க வைப்பார். பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பார்.
திருமணம் ஆனவர்களுக்கு மனைவியால் யோகத்தை உண்டாக்க செய்வார். கூட்டு தொழில் அமைய வழி செய்வார். தெய்வகாரியங்களில் அதிக ஈடுபாடு உண்டாக்குவார். வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பும், அதனால் பலனும் கிடைக்கச் செய்வார். உடல்நலனில் மட்டும் சற்று கவனம் தேவை. மற்றவர்களுக்கு ஜாமீன் கையெழுத்து போடும் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஜவுளித்துறை, ஏஜென்ஸி விவகாரம், மருந்து பொருட்கள் வியபாரம் போன்றவை சிலருக்கு அமோக நன்மை கொடுக்கும்.
மிதுனம் : 2012 மே மாதம் 17-ம் தேதி உங்கள் மிதுன இராசிக்கு 12-ல் குரு பெயர்ச்சி ஆகிறார். குரு அமர்கிற இடம் உங்களுக்கு விரைய ஸ்தானத்தில் என்பதால் நல்லது இல்லை என்பது பொது பலனாக இருந்தாலும், நான் உறுதியாக கூறுகிறேன் உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி நன்மைதான் செய்யும். காரணம், 7 மற்றும் 10-ம் இடத்துக்கு அதிபதி அதாவது கேந்திராதிபதி எப்போதும் கெட வேண்டும். உங்கள் இராசிக்கு குரு கெட்டவன். ஆகவே 12-ல் அமர்ந்த குரு யோகத்தை கொடுப்பான்.
வியக்க வைக்கும் வாய்ப்பை தருவான். வெளிநாடு வேலைக்கு காத்திருந்தவர்கள் விமான பயணத்திற்கு தயாராக வேண்டிய காலம். தடைபட்ட கல்வி வெற்றி பெறசெய்யும். உடல்நலனில் இருந்த பிரச்னை குணமாகும். நீண்ட நாட்களாக இருந்துக் கொண்டிருந்த வழக்கு சமரசம் ஏற்படும் அல்லது வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.
மனக்குழப்பம் தீரும். முக்கியமாக வண்டி வீடு அமையும். வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீடு வாங்கும் அமைப்பை குரு பகவான் ஏற்படுத்துவார். இதுநாள்வரை கடன் தொல்லையில் இருந்தவர்களுக்கு, கடனை காணாமல் போகச் செய்து விடுவார் குரு. ஆகவே மிதுன இராசி நேயர்களே 12-ல் குரு பெயர்ச்சி என்பதால் பயமே வேண்டாம். எழுதியர்கள் சிலர் ஏட்டை கெடுத்து விட்டார்கள். அதனால் கவலை வேண்டாம். இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு நன்மை செய்யும்.
கடகம் : 2012 மே மாதம் 17-ம் தேதி குருபகவான் உங்கள் இராசிக்கு 11-ம் இடம் என்கிற லாபத்தில் அமர்ந்து விட்டார். கேட்கவே வேண்டாம். நினைத்தது எல்லாம் கைக்கு வரும். 11-ம் இடம் லாபஸ்தானம். ஆகவே சர்க்கரை என்று சொல்வதற்கு முன்பே கைக்கு சாக்லெட் வந்துவிடும். இது உண்மை. 11-ம் இடம் யோகஇடம். உங்கள் இராசிக்கு 6-ம் இடம் மற்றும் 9-ம் இடத்திற்கு அதிபதி குரு, லாபத்தில் அமர்வதால் பழைய பிரச்சனைகள் தீரும். 3-ம் இடம் 5-ம் இடம் 7-ம் இடத்தை பார்வை செய்வதால் கீர்த்தி ஏற்படும்.
எதையும் தைரியமாக சமாளித்து வெற்றி பெற செய்யும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குரு பார்வை செய்வதால், பிள்ளைகளுக்கு திருமணம் பாக்கியம் தரும்.  எதிர்பாரா தனயோகத்தையும் கொடுக்கும்.  மனைவி வர்க்கத்தில் சில பிரச்னை இருந்தாலும் தீர்ந்து போகும். கூட்டு தொழில் அமைய வழி வகுக்கும்.
முக்கியமாக இதுநாள் வரை தெளிவு இல்லாமல் இருந்த மனம் தெளிவு பெற்று துணிச்சலாக எடுத்த காரியத்தை முடிக்க வைப்பார். 3-ம் இடம் சாதாரனமான இடம் இல்லை. தைரியத்தை கொடுக்கும் இடம். ஆகவே தைரியமாக எதையும் எடுத்து வெற்றி பெறுங்கள். அரசாங்கத்தால் லாபம் உண்டு. தண்ணீருக்கு தவித்த சிலர் பன்னீரில் குளிப்பார்கள். லாப குரு லாபத்தை வாரி வழங்கும்.
சிம்மம் : 2012 மே மாதம் 17-ம் தேதி உங்கள் இராசிக்கு 10-ல் குரு வருகிறார். பொதுவாக 10-ல் குரு அமர்ந்தால் பதவி கெடும் என்று சிலர் பயமுறுத்தவர். ஆனால் உங்கள் இராசிக்கு குரு 10-ல் இருப்பது பெறும் நன்மை செய்வார். அது எப்படி என்றால்? உங்கள் இராசிக்கு 5-ம் இடம் மற்றும் 8-ம் இடத்திற்கு அதிபதி குரு கேதுவுடன் இணைந்து கெட்டான். அது மட்டுமல்ல. திரிகோணதிபதி கேந்திரம் அதாவது, 5-ம் இடத்து அதிபதி 10-ல் இருந்தால் மண்ணும் பொன்னாகும்.
உங்கள் இராசிக்கு 2-ம் இடம், நான்காமிடம், ஆறாம் இடத்தை குரு பார்வை செய்வதால், அதற்கரிய பலனாக திருமணம் பாக்கியம் தருவார், தனம் பெருக செய்வார், ஆயிரம் எதிர்பார்த்தால் பத்தாயிரம் கொடுப்பார். வண்டி வீடு – வசதி செய்து கொடுப்பார். 6-ம் இடம் சத்ருஸ்தானம். விரோதிகள் – வழக்குகள் அத்தனையும் பஞ்சு போல் காற்றில் பறக்கும். பிரச்சனைகள் அத்தனையும் தவிடுபொடியாகும்.
தடைபட்ட புதிய தொழில் கூட மலர ஆரம்பிக்கும். அன்னிய நபர்களால் உதவி கிடைக்கும். கடல் கடந்து செல்லக்கூடிய வாய்ப்பு வரும். பொதுவாக யாரும் எதிர்பாரா நல்ல வாய்ப்பு உங்களை தேடி வரும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். பைனாஸ், ரியல் எஸ்டேட், இரும்பு சம்மந்தபட்ட தொழில் லாபம் ஏற்படும். மடுவில் இருந்தவர்கள் மலைமீது நிற்பது நிச்சயம்.
கன்னி : 2012 மே மாதம் 17-ம் தேதி உங்கள் இராசிக்கு 9-ல் அதாவது பாக்கியத்தில் குரு அமர்கிறார். சொல்லவே வேண்டாம். சொத்து சுகத்தை கிள்ளி கொடுத்தவர் இனி அள்ளி கொடுப்பார். உங்கள் இராசிக்கு குரு பகவான், சுகஸ்தானம் – களத்திரஸ்தானத்திற்கு அதாவது, 4-ம் இடம், 7-ம் இடத்திற்கு அதிபதி. அவர் பாக்கியத்தில் அமர்ந்து உங்கள் இராசியையும், 3-ம் இடத்தையும், 5-ம் இடத்தையும் பார்வை செய்கிறார். உடல்நல பாதிப்பில் இருப்பவர்கள் சுகம் பெறுவர்.
மற்றவர்கள் உங்களை புகழ்ந்து பேசும் அளவுக்கு வேலை செய்து கீர்த்தி பெறுவீர்கள். பிள்ளைகளுக்கு சுபநிகழ்ச்சிகள் நடக்கும். இதுவரையில் மேல்படிப்பில் தடை இருந்தால் அத்தடை விலகும். எதிர்பார தனவரவு கைக்கு வரும். பூர்வீக சொத்துக்களில் வில்லங்கம் இருந்தால் அவை விலகி உங்களை நாடி வரும். மண் புழுவாக இருந்தவர் மலைப்பாம்பாக மாறினாரே என்ற சொல்லும் அளவிற்கு உங்களுக்கு தைரியம் தருவார்.
உங்கள் இராசிக்கு 3-ம் இடத்தை பார்வை செய்கிற குரு பகவான். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு வரும். சொத்து சுகங்கள் சேரும். மனைவியால் யோகம் அமையும். பெரியவர்கள் ஆசி கிடைக்கும். தெய்வகாரியங்கள் செய்யும் வாய்ப்பு தேடி வரும். பொதுவாக பாக்கியத்தில் அமர்ந்த குரு பகவான், Powerரான வாழ்க்கை தருவார்.. எண்ணெய் இரும்பு நவதானியம் போன்ற வியபாரத்தில் பெறும் நன்மை கொடுக்கும். சோகத்தை துரத்தி யோகத்தை கொடுக்கும் குரு பெயர்ச்சி இது.
துலாம் : 2012 மே மாதம் 17-ம் தேதி குரு பகவான் உங்கள் இராசிக்கு 8-ல் அமர்கிறார். அதாவது அஷ்டமத்தில். “அகப்பட்டவனுக்கு அஷ்டம குரு” என்பார்கள். இன்னும் அஷ்டம குருவை பற்றி சொல்ல ஆரம்பித்தால் எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அதை பற்றி கவலை வேண்டாம். 3-ம் இடம் மற்றும் 6-ம் இடத்திற்கு அதிபதி குரு பகவான். அவர் 8-ல் அமர்வதால் நன்மையே. கெட்டவன் கெட வேண்டும். “கெட்டவன் கெட்டில் கிட்டிடும் ராஜயோகம்.” அதனால் குரு பகவான் உங்கள் இராசிக்கு 8-ல் இருந்து, 12-ம் இடம், 2-ம் இடம், 4-ம் இடங்களை நோக்குகிறார்.
இந்த குரு பெயர்ச்சியில் தூர பயணம் செய்ய வைப்பார். வெளிநாட்டினர் தொடர்பு வரலாம். அல்லது அங்கு வேலை கிடைக்கலாம். குடும்பத்தில் சுப செலவு ஏற்படும். கொடுக்கும் வாக்கை காப்பாற்றும் சக்தி கொடுப்பார். கைக்கு தனம் தேடி வரும். புதிய திட்டங்கள் நிறைவேறும். வழக்கு – ஜாமீன் விஷயங்களில் கவனம் தேவை. மேல் படிப்பு தொடர வாய்ப்புண்டு. கடன்கள் தீரும். மனைவிக்கு உடல்நலம் பாதிப்பு இருந்தாலும் நிவர்த்தியாகும்.
தள்ளிக் கொண்ட போன திருமணம் சிலருக்கு அமோகமாக முடியும். நண்பர்கள் உதவி கிடைக்கும். உங்கள் இராசிக்கு சுகஸ்தானப்படி வாகனம் – வீடு எதிர்பாராமல் அமையும். முக்கியமாக பொறுமையாக இருந்து காரியத்தை சாதித்து கொள்ள வேண்டும். பரபரப்பால் கைக்கு வருவதை விடடு விடவேண்டாம். அஷ்டம குரு ஆட்டி படைப்பான் என்ற கவலையே வேண்டாம். ஜவுளி, ஆபரணம், பெண்கள் அழகு சாதனம் போன்ற வியபாரங்கள் லாபம் தரும்.
விருச்சிகம் : 2012 மே மாதம் 17-ம் தேதி குரு பகவான் உங்கள் இராசிக்கு சப்தமத்தில் அதாவது 7-ல் அமர்கிறார். குரு பகவான் உங்கள் இராசிக்கு தன பஞ்சமாதிபதி 2 – 5க்குரியவர். அவர் 7-ல் அமர்ந்து லாபஸ்தானம், ஜென்மஸ்தானம், கீர்த்திஸ்தானத்தை பார்வை செய்கிறார். உங்கள் தொழில் துறையில் செல்வாக்கு கூடும். புகழ் – கீர்த்தி அடைவீர்கள். காரியம் சாதிப்பீர்கள். எழுத்துத்துறையில் புகழ் பெறுவீர்கள். முக்கியமாக, களத்திரஸ்தானத்தில் இருப்பதால் திருமணம் ஜாம் ஜாம் என்று நடைபெறும். நண்பர்கள் உதவியால் கூட்டு தொழில் அமையும்.
புண்ணியஸ்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். எதிர்பாரா தனவரவு உண்டு. பூர்வீக சொத்துக்கள் கைக்கு வரும். குலதெய்வ அருள் பரிபூரணமாக கிடைக்கும். கடன் தீரும். மறுபடியும் தொழிலுக்கோ – சுபநிகழ்ச்சிகளுக்கோ சற்று கடன் வாங்கும் சூழ்நிலையும் ஏற்படும். மேல்படிப்பு உத்தியோகம் வெற்றி பெறும். உயர் அதிகாரிகள் உதவி தானே கிடைக்கும்.
பெற்றோருக்கு உடல்நலம் சீராகும். பிள்ளை பேறு இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். ரியல் எஸ்டேட், செங்கள், இரும்பு, எவர்சில்வர் வியபாரங்கள் லாபத்தை தரும். இதுவரையில் 6-ல் இருந்து அவஸ்தை கொடுத்த குருபகவான், சப்தமத்தில் (7-ல்) அமர்ந்து பல நன்மைகளை தருவான். எல்லாம் நலமே.
தனுசு : 2012 மே மாதம் 17-ம் தேதி குரு பகவான் உங்கள் இராசிக்கு 6-ல் அமர்கிறார். 6-வது இடம் ரோகஸ்தானம். அங்கு அமரலாமா? தவறில்லை. அது எப்படி என்றால், அதாவது கேந்திராதிபதி கெட வேண்டும். உங்கள் இராசிக்கு குரு பகவான், ஜென்மாதிபதி மற்றும் சுகாதிபதி. அதன்படி குரு உங்களுக்கு கேந்திராதிபதி. கேந்திராதிபதி கெட வேண்டும். அப்போதுதான் யோகத்தை கொடுப்பான். “கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் இராஜயோகம்.” கவலையே வேண்டாம்.
சொத்து விவகாரங்களில் தொல்லை, கடன் தொல்லை, பிடுங்கி எடுத்த வியாதி அத்தனையும் தூசு போல பறந்து விடும். உங்கள் இராசிக்கு 2-ம் இடத்தையும், 10-ம் இடத்தையும், 12-ம் இடத்தையும் குரு பார்வை செய்வதால், உயர் பதவி கிடைக்கும். . சரியான வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பும், புதிய தொழில் அல்லது செய்யும் தொழிலில் லாபமும் தரும். சொந்த தொழில் செய்பவர்கள் அதில் முன்னேற்றம் பெற்று நல்ல தொழிலதிபதி என்கிற அந்தஸ்தை பெறுவீர்கள்.
செலவுக்கு மேல் வரவு கிடைக்கும். வாக்கு வன்மையால் உங்கள் பேச்சுக்கு பலர் கட்டுபடுவர். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்னைகளும் சுமுகமாக தீர்ந்து, மறுமலர்ச்சி பெறும். பொதுவாக குடும்பஸ்தானத்தை குரு பார்ப்பதால், திருமண வாழ்க்கை, குடும்பத்தில் சுபகாரியங்கள் பிரமாதமாக நடைபெறும். சிலர், “6-ல் குரு அவஸ்தை கொடுப்பான்” என்று கூறுவார்கள். என் ஜோதிடகணிதப்படி, உங்கள் இராசிக்கு 6-ல் அமர்ந்த குரு பகவான் அள்ளி தருவார். ஜவுளி தொழில், நவரத்தின வியபாரம், மின்பொருள் தொழில் லாபமாக அமையும்.
மகரம் : 2012 மே மாதம் 17-ம் தேதி குரு பகவான், உங்கள் இராசிக்கு பஞ்சமத்தில் அதாவது 5- ல் பெயர்ச்சியாகிறார். 3 – 12 க்குரிய குரு, 5-ல் அமர்ந்து ஜென்மத்தையும், பாக்கியஸ்தானத்தையும், லாபஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். பழைய வீட்டை புதுபித்தல், வாடகை வீட்டில் வசதி இல்லாத வாழும் சிலர், சொந்த வீடு வாங்கும் யோகத்தை பெற போகிறீர்கள். எதிர்பாரா தனவரவு, தேவையான பணவசதி கிடைக்கும். பலர் உங்களுக்கு உதவ முன் வருவார்கள்.
அரசாங்க ஆதாயம் உண்டு. தொழில்துறையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு வரும். சிலருக்கு வெளிநாட்டு பயணம் அமையும். அதேசமயம் தேவை இல்லா செலவுகளும் வரும். மனதில் தன்னம்பிக்கை வளரும். முடியாத காரியத்தையும் முட்டிமோதி வெற்றி பெறுவீர்கள். சில காரியங்களில் என்ன ஆகுமோ? எப்படி ஆகுமோ? என்று குழம்பிக்கொண்டு இருந்த நீங்கள், அந்த குழப்பம் நீங்கி எளிதாக சாதித்து விடுவீர்கள். குழந்தை பாக்கியம் கிட்டும். மேல்படிப்பு தடைபட்டிருந்தால் அதை படிக்கும் அருமையான காலம் இது.
மந்திர – தந்திரத்தால் காரியத்தை சாதிக்க 5-ல் இருக்கும் குரு, நல்ல ஐடியா கொடுப்பார். ஆகவே உங்கள் கையில் ரிமோட் இருக்கிறது. பகைவர்களையும் பணிய வைக்கலாம். விவசாயம், வாகன வியபாரம், சிமெண்ட், கெமிக்கல் இவைகளில் நல்ல வருமானத்தை வாரி வழங்கும். வளமான வசதிகள் ஏற்படும். கவலையே வேண்டாம்.
கும்பம் : 2012 மே மாதம் 17-ம் தேதி உங்கள் இராசிக்கு சுகஸ்தானத்தில் (4-ல்) குரு பெயர்ச்சியாகிறார். தன – லாபாதிபதி அதாவது 2 – 11க்குரிய குரு பகவான், 4-ம் இடத்தில் அமர்ந்து 8,10,12-ம் இடங்களை அதாவது அஷ்டமஸ்தானம் – ஜீவனஸ்தானம் – விரயஸ்தானம் போன்றவற்றை பார்வை செய்கிறார். இடம் மாற்றம், பதவி உயர்வு ஏற்படலாம். வீடு – மனை வாங்கும் யோகம் உண்டாகும். பட்டப்படிப்பு தடையின்றி முடிக்கும் பாக்கியம் கிடைக்கும். தொழில் துறையில் நீங்களே ஆச்சரியம் படும்படி விறுவிறுப்பாக முன்னேறும்.
கடன் வழக்கு பிரச்னை தீர்வுக்கு வரும். தேவை இல்லாமல் வம்பு செய்தவன் கூட வாலை சுருட்டிக்கொண்டு உங்கள் முன் நிற்பான். விரயங்கள் – சுபவிரயமாக ஏற்படும். திருமணம் – புதுமனை புகுதல், புத்திர பேறு போன்ற சுபசெலவுகள் ஏற்படும். பெற்றோர் உடல்நலம் சீரடையும். அரசாங்க விஷயத்தில் ஏதாவது பிரச்னை இருந்தாலும் சுமுகமாக தீரும்.  வங்கி உதவி கிடைக்கும். தெய்வ வழிபாடு அதிகமாக ஏற்படும்.
புண்ணியஸ்தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு வரும். கம்ப்யூட்டர் சாதனம், பிளாஸ்டிக் வியபாரம், ஜவுளி வியபாரம், ஸ்டேஷ்னரி தொழில் லாபம் கிடைக்கும். குழம்பிய குட்டை போல் இருந்த வாழ்க்கை, ஸ்படிகம் போல தெளிவு பெறும். 4-ல் அமர்ந்த குரு, நலமான வாழ்க்கை தருவார்.
மீன ராசி : 2012 மே மாதம் 17-ம் தேதி உங்கள் இராசிக்கு ஜென்மாதிபதியும் – ஜீவனாதிபதியுமான குரு பகவான், உங்கள் இராசிக்கு மூன்றில் அமர்கின்றார். 3-ம் இடம் கீர்த்திஸ்தானம் என்று சொல்லக்கூடிய தைரியஸ்தானமாகும். நினைத்ததை உடனே முடிக்கும் ஆற்றல் கொடுக்கும். உங்களுக்கு உதவ பலர் முன் வருவர். உங்கள் இராசிக்கு 7,9,11-ம் இடங்களை அதாவது, சப்தமஸ்தானம், பாக்கியஸ்தானம், லாபஸ்தானம் போன்றவற்றை குருபார்வை செய்வதால், நீண்ட நாட்களாக தடைபட்ட திருமணம் பிரமாதமாக நடக்கும்.
கணவன் – மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். வாங்க வேண்டும் என தவித்த வீடு – மனை வாங்குகிற பாக்கியம் வந்தடையும். பெரும் பதவி வகிப்பவர்களின் உதவிகள் கிடைக்கும். அயல்நாடு செல்லும் பாக்கியம் உண்டாகும். திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறும். தெய்வ அனுகிரகத்தால் உடல்நலம் சீரடையும். குடும்பத்தில் பாகப்பிரிவினை இருந்தாலும் ஓற்றுமை ஏற்படும். விரோதங்கள் விட்டில் பூச்சி போல் மறைந்துவிடும்.
மனக்குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். காண்டிராக்ட், மருத்துவதொழில் செய்பவர்கள், ஒட்டல் தொழிலில் இருப்பவர்கள் கை நிறைய பணம் அள்ளுவர். பொதுவாக மூன்றில் அமர்ந்த குரு, உங்கள் பகையாளிகள் மூக்கின் மீது விரலை வைக்கும் அளவுக்கு உங்கள் வளர்ச்சி ஜெட் வேகத்தில் உயர வைக்கும். மேன்மை தருவார் குரு பகவான்.

0 comments :

Post a Comment