திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில்
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
பிரதானம் : சனீஸ்வரர்
மூலவர் : நள்ளாறர்
பெருமை : சுயம்பு
அம்பாள் : பூண்முலையாள்
சிறப்பு : சப்தவிடதலம்
தலமரம் : தர்ப்பை
தீர்த்தம் : நளதீர்த்தம்
பதிகம் : தேவாரம்
ஊர் : திருநள்ளார்
மாநிலம் : பாண்டிச்சேரி
நள தீர்த்தம்: இக்கோவிலுக்கு அருகில் நள தீர்த்தம் என்ற பெயரில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. சனியின் ஆதிக்கத்திற்கு உள்ளான நளச் சக்கரவர்த்தி பல துன்பங்களை அனுபவித்தான். கடைசியில் இத்தலம் வந்து இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சனி பகவானையும், இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரரையும் வழிபட்டு துன்பம் நீங்கப் பெற்றான். நளன் நீராடிய தீர்த்தம் அவன் பெயரால் நள தீர்த்தம் என்று பெயர் பெற்றது. நள தீர்த்தம் தவிர, பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் உள்ளிட்டவையும் இத்தலத்தில் உள்ளன. சனீஸ்வரன் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனிப் பெயர்ச்சியின் போது அவர் அவர்கள் ஜாதகத்தின் தன்மைக்குத் தக்கவாறு நன்மை தீமைகள் நடைபெறகூடும் என்பதால் இந்நாளில் சனிபகவானுக்கு தீபமேற்றி வழிபட்டால் நன்மை உண்டாகும் என்பது மக்கள் நம்பிக்கை. இதனால் ஒவ்வொரு சனிப் பெயர்ச்சியின் போதும் லக்ஷக்கணக்கில் மக்கள் இங்கு வந்து நள தீர்த்தத்தில் நீராடி சனி பகவானையும், இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரரையும் வழிபாடு செய்கின்றனர்.தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம் ஏழு நிலை ராஜகோபுரம் கொண்டு எழிலுடன் விளங்குகிறது. இத்தலம் தியாகராஜருக்குரிய சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள தியாகராஜர் தகவிடங்கர் எனப்படுகிறார். அவர் ஆடும் நடனம் உன்மத்த நடனம் எனப்படும். இத்தலத்தின் மூலவராக சிவபெருமான் தர்ப்பாரண்யேஸ்வரர் என்ற பெயருடன் அருள் பாலித்து வந்தாலும், இத்தலத்தின் பெருமைக்கு மூலகாரணமாக இருப்பவர் இத்தலத்தில் தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ள சனீஸ்வரர் ஆவார். நவக்கிரக ஸ்தலங்களில் சனி பகவானுக்கு உரிய ஸ்தலமாக திருநள்ளாறு விளங்குகிறது. சனீஸ்வரன் தனி சன்னதி கொண்டு அருள்பாலிப்பதால் இக் கோயிலில் நவகிரகங்கள் கிடையாது. மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரர் சந்நிதிக்கும், இறைவி பிராணம்பிகை சந்நிதிக்கும் இடையில் சனீஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது. சனிக்கழமைகளில் சனீஸ்வரரை வழிபடுவதற்காக பக்தர்கள் பெருமளவில் இங்கு கூடுகிறார்கள். இக் கோயிலில் சனி பகவானுக்கு உகந்த காக்கை வாகனம் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. விசேஷ காலங்களில் சனீஸ்வர பகவான் தங்கக் காகம் வாகனத்தில் அமர்ந்து வீதி உலா வருவார். இந்த தலத்திற்கு வந்து சனீஸ்வரரையும், தர்ப்பாரண்யேஸ்வரரரையும் வணங்குபவர்களுக்கு சனி பாதிப்பைத் தாங்கிக்கொள்ளும் மன திடமும், பிரச்னைகளிலிருந்து மீளும் வழியும் கிட்டும். நல்வாழ்வுக்கும் வழி பிறக்கும்.

