7ஆம் அறிவு

Saturday, 26 November 2011

7ஆம் அறிவு


7ஆம் அறிவு

கொஞ்சம் சரித்திரம், கொஞ்சம் பிரம்மாண்டம் இரண்டையும் சம பங்காகக் கலந்து, அதில் சீனா, வைரஸ், பயோவார் என்பது போன்ற விஷயங்களைத் திணித்து, ஒரு திரைக்கதையை உருவாக்க முற்பட்ட இயக்குநர் முருகதாஸ் அத்துடன் திருப்தி அடைந்தாரா என்றால் இல்லை. வியாபார வெற்றிக்கு சூர்யா போன்ற நட்சத்திர நாயகன் இருந்தால் மட்டும் போதாது என்று கமல்ஹாசனின் மகள் என்கிற விளம்பரமும், ரசிகர்கள் எதிர்பார்ப்பும் கிடைக்கும் என்பதால் ஸ்ருதிஹாசனைக் கதாநாயகியாகச் சேர்த்துக் கொண்டார்.
இத்தனை இருந்தும் எடுபடுமோ எடுபடாதோ என்கிற சந்தேகம் ஏற்பட்டதால், தமிழுணர்வு, தமிழனின் பழம் பெருமை என்று "தமிழ்' சென்டிமென்டையும் சேர்த்துக் குழைத்துக் கொண்டார். இவ்வளவு இருந்தும் வலுவில்லாத ஒரு திரைக்கதை, ஏழாம் அறிவுக்கு மட்டுமே புலப்படும் குழந்தைத்தனமான காரணங்கள் போன்றவை, அவ்வளவு உழைப்பையும், பணத்தையும் வீணடித்து விடுகிறது.
எந்திரனைப் பார்த்துத் தொழில்நுட்பம் என்கிற பெயரில் இயக்குநர் முருகதாஸ் சூடுபோட்டுக் கொண்டால் எப்படி? ரஜினி நடித்தே எடுபடாத எந்திரனை வியாபார உத்தியால் அத்தனை திரையரங்குகளையும் வளைத்துப் போட்டுத்தானே வசூலை அள்ள முடிந்தது? பிறகும் ஏன் முருகதாசுக்கு அப்படியொரு விபரீத ஆசை?
இனி, படத்தின் கதைக்கு வருவோம்.
இந்தியாவில் மிகக் கடுமையான வைரஸ் கிருமிகளைப் பரப்பி அதன் மூலம் நம் நாட்டை அடிபணியச் செய்யத் திட்டமிடும் சீன அரசின் முயற்சியை ஒரு தமிழன் தடுத்து நிறுத்தி நாட்டையும் மக்களையும் காப்பற்றுகிறான் என்பதுதான் "ஏழாம் அறிவு' திரைப்படத்தின் கதை.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த போதிதர்மன் ஆயகலைகள் அறுபத்தி நான்கையும் கற்றுத் தேர்ந்த வித்தகர். குறிப்பாக, மருத்துவம், தற்காப்பு, பார்வையால் எவரையும் கட்டிப்போடும் "நோக்கு வர்மம்' போன்ற கலைகளில் அதீத ஆற்றல் பெற்றவர். அப்படிப்பட்ட போதிதர்மன், அவருடைய குருமாதாவின் கட்டளையை ஏற்று சீனாவுக்குச் செல்கிறார்.
அவர்களுக்கு ஏற்படும் கொடிய நோயைத் தன்னுடைய மருத்துவ அறிவால் தீர்த்தும் எதிரிகளிடம் இருந்து அந்த மக்களைக் காத்தும் அவர்களுடைய மனதில் கடவுளாக இடம்பிடிக்கிறார். அவர்கள் விருப்பப்படியே சீனாவிலேயே சமாதி அடைகிறார். இவையெல்லாம் நடந்தேறுவது ஆறாம் நூற்றாண்டில்.
இப்போது 21-ம் நூற்றாண்டுக்கு வருகிறது கதை. உலகில், வல்லரசாக வலுப்பெற்று வரும் இந்தியாவைத் தங்கள் கட்டுக்குள் வைக்க சீன அரசு திட்டமிடுகிறது. அதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்கும் யுக்தி "பயோ வார்' எனப்படும் மறைமுக வைரஸ் யுத்தம்.
இதற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ், நோக்கு வர்மம் உள்ளிட்ட பல வித்தைகளைக் கற்றுத் தேர்ந்த திறமையான, அதே சமயம் கொடுஞ்செயல்களுக்கு அஞ்சாத ஒரு சீனனை தமிழகத்துக்கு அனுப்புகிறது. சீனா இந்தியாவின் மீது "பயோ வார்' நடத்த கல்கத்தாவையோ, தில்லியையோ, மும்பையையோ தேர்ந்தெடுக்காமல் ஏன் தமிழகத்தை, அதிலும் குறிப்பாக சென்னையைத் தேர்ந்தெடுத்தது என்றெல்லாம் கேட்டுவிடக் கூடாது.
இந்தியாவில் பரப்புவதற்காகக் கொண்டு வரப்படும் தொற்றுநோய்க் கிருமியை ஒரு நாய்க்கு ஊசி மூலம் செலுத்தித் தனது "பயோ வாரை' சீனா தொடங்குகிறது. நாய்க்கு நோய்க் கிருமியை ஊசியாகப் போட்டு பயோ வார் நடத்தப்படலாம் என்கிற கற்பனைக்கு நோபல் பரிசுதான் கொடுக்க வேண்டும்.
இந்தியாவிலேயே மிக அதிகமாகத் தெரு நாய்கள் சுற்றுவது சிங்காரச் சென்னையில்தான் என்பது சீனா வரை தெரிந்திருக்கிறதே, பலே, பேஷ்... பேஷ்...!
அதையடுத்து அரங்கேறும் அதிரடித் திருப்பங்களும் அதிர்ச்சியளிக்கும் சம்பவங்களும்தான் கதை. என்ன கதையோ? இதற்கு போதிதர்மன் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடும் கதாநாயகி ஸ்ருதிஹாசன் வேறு. அவர் போதிதர்மனின் வம்சாவளிகளை 14 நூற்றாண்டுகளுக்குப் பிறகு சரியாக அடையாளம் கண்டு, போதிதர்மன் போலவே இருக்கும் சர்க்கஸ்காரர் சூர்யாவையும் கண்டுபிடிக்கிறார்.
போதிதர்மனாக சூர்யா தோன்றும் ஆரம்பக் காட்சிகள் அனைத்தும் தமிழ் ரசிகர்கள் இதுவரை கண்டிராத ஒரு சுகானுபவம். போதிதர்மனின் மரபுரீதியான வழித்தோன்றலாக வரும் 21-ம் நூற்றாண்டு சூர்யா, சர்க்கஸ் கலைஞனாக வலம் வந்து, விஞ்ஞானி ஸ்ருதிஹாசனைக் காதலித்து, அவருக்காக மரபணு மாற்றங்களுக்கு சம்மதித்து, சண்டை போட்டு, தத்துவம் பேசி, தேச பக்தி, தமிழுணர்வு பற்றியெல்லாம் எடுத்துரைத்து, அப்பப்பா... ரொம்பவும் கஷ்டப்பட்டிருக்கிறார். நம்மையும் கஷ்டப்படுத்துகிறார்.
ஸ்ருதிஹாசனின் முகத்தில் அப்பாவின் நடிப்புத் திறமையும் மிஸ்ஸிங். அம்மாவின் கவர்ச்சியும் மிஸ்ஸிங். பேசும்போது குழந்தைத்தனம் தெரிகிறதே தவிர அழுத்தம் போதவில்லை. கமல்ஹாசனின் மகள் என்பதால் வலம் வரக்கூடும். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அட, சினிமாவுக்கு ஒரு அட்டகாசமான கதாநாயகி கிடைத்துவிட்டார் என்றெல்லாம் சொல்லி மகிழ முடியாது.
படத்தில் அனைவரையும் கவருவது வில்லனாக வரும் ஜானி ட்ரை நெக்யூயென். டாங் லீ என்ற கதாபாத்திரத்தில் இவர் வரும்போதெல்லாம் ரசிகர்களுக்கு உற்சாகத்தோடு பயமும் ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது.  
"ரமணா'வில் ஒரு "வானவில்லே, வானவில்லே', "கஜினி'யில் "சுட்டும்விழிச் சுடரே, சுட்டும்விழிச் சுடரே' போல "7ஆம் அறிவில்' ஒரு பாட்டுக்கூட மனதில் நிற்கவில்லையே' ஏன் என்று ஹாரிஸ் ஜெயராஜைத்தான் கேட்க வேண்டும்.
போதிதர்மன் என்ற ஓர் அரிய விஷயம் கிடைத்துவிட்டது என்றவுடன் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தாமல் திரைக்கதையை அமைத்ததுதான் படத்தின் மிகப்பெரிய பலவீனம். தமிழன், தமிழன் என ஆங்காங்கே வரும் வசனங்கள் ரசிகர்களைக் கை தட்ட வைத்தாலும் தமிழ் உணர்வை வலுக்கட்டாயமாகத் தூண்டி வெற்றி பெற்றுவிடலாம் என்ற எண்ணம் படம் முழுவதும் படர்வது இன்னொரு பலவீனம். படத்தின் ஆரம்பத்திலேயே போதிதர்மனைப் பற்றிய ஒரு விவரணை இடம்பெற்றுவிட்ட பிறகும் "அசோகர் கலிங்கத்துப் போரில் வென்றார்.
அசோகர் சாலையோரம் மரங்களை நட்டார்; அசோகர் ஆங்காங்கே சத்திரங்களைக் கட்டினார்' என சிறு பிள்ளைகள் மனனம் செய்து ஒப்பிப்பதைப் போல இரண்டு காட்சிகளுக்கு ஒரு முறை "போதிதர்மர் தமிழர்; போதிதர்மர் சீனாவுக்குச் சென்றார்; போதிதர்மர் சீனர்களுக்கு தற்காப்புக் கலையையையும் மருத்துவத்தையும் கற்றுத் தந்தார்' என ஸ்ருதிஹாசன் பேசுவது, வியப்பை ஏற்படுத்துவதற்கு பதில் சலிப்பை ஏற்படுத்துகிறது.
அதேபோல ஒரு சீன வில்லன், அதுவும் தமிழ் தெரியாத ஒருவன், சென்னைக்கு வந்து காவல் நிலையங்களைத் துவம்சம் செய்து காவலர்களை நோக்கு வர்மத்தால் கொல்கிறார்; பொது இடங்களில் பல்வேறு விபத்துகளை உருவாக்கி பலரைப் பலியாக்குகிறார். விட்டலாச்சாரியா இப்போது படமெடுத்தால் இப்படித்தான் எடுக்கக்கூடும். ஏ.ஆர். முருகதாஸ் சமீபத்தில் "மீனவன்', "பாட்டி சொன்ன கதை' போன்ற படங்களைப்  பார்த்திருப்பாரோ என்கிற சந்தேகம் எழுகிறது.
"நோக்குவர்மம்' என்பதைக் கேலிக் கூத்தாக்கி விட்டார்களே, கன்டெய்னர் லாரிகளும், கார்களும், ஆட்டோக்களும் பல்டி அடிப்பதெல்லாம் "கிராஃபிக்ஸ்' என்று காட்டி நம்மை நெளிய வைத்துவிடுகிறார்கள்.
படத்தின் மைனஸ் பாயிண்ட்டுகளில் முதன்மையாகக் கருதப்படுவது படத்தொகுப்புதான். வரலாற்றுப் பின்னணியையும் நவீன யுகத்து நிகழ்வுகளையும் ஒருசேரப் பதிவு செய்ய முயற்சித்துள்ள இந்தப் படத்துக்குக் கையாளப்பட்ட படத்தொகுப்பு யுக்திகள் பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றன.
முதல் 20 நிமிடம் அற்புதம். ரவி.கே. சந்திரனின் ஒளிப்பதிவு அனைத்திலும் அபாரம். சில இடங்களில் அவர் அமைந்திருக்கும் லைட்டிங் எஃபெக்ட் சர்வதேசத் தரத்திலானது. குறிப்பாக, "முன் அந்திச் சாரல் நீ' பாடலில் லொகேஷனும் சரி, கேமிரா கோணங்களும் சரி, "ஃபிரேமுக்கு ஃப்ரேம் ரவி.கே. சந்திரனை கைகுலுக்கி சபாஷ் போட வைக்கிறது.
அடேயப்பா, ராஜீவனின் கலை வடிவம் பிரமிக்க வைக்கிறது. 14 நூற்றாண்டுக்கு முற்பட்ட சீனாவை மீண்டும் சிருஷ்டித்து அசத்தி இருக்கும் இவர் இருக்க வேண்டிய இடம் ஹாலிவுட். இவருக்குத் தரப்பட வேண்டிய விருது ஆஸ்கர்.
ரவி.கே. சந்திரனின் ஒளிப்பதிவையும், ராஜீவனின் கலைத் திறமையையும் பாராட்டுவதற்காக ஒரு தடவை பார்க்கலாம். பார்க்க வேண்டும். மற்றபடி, இயக்குநர் முருகதாஸ் பற்றிய நமது எதிர்பார்ப்புகள் பொய்த்துவிட்டன!

0 comments :

Post a Comment