ராம்லீலா மைதானம் அன்னா ஹசாரே

Friday, 19 August 2011

ராம்லீலா மைதானம் அன்னா ஹசாரே


புதுடில்லி: ஜன் லோக்பால் மசோதா உருவாக்கிட வலியுறுத்தி நான்கு நாட்கள் சிறையில் இருந்து இன்று காலை (11. 42 மணிக்கு ) வெளியே வந்த இவரை ஆயிரக்கணக்கானவர்கள் திரளாக நின்று, வாழ்க அன்னா , வாழ்க அன்னா என்றும் ஊழலுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். ஹசாரேவுக்கு பூ மழை தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஆதரவாளர்கள் புடைசூழ போராட்டம் நடத்தவிருக்கும் ராம்லீலா மைதானத்திற்கு புறப்பட்டு சென்றார். தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வரும் அவர் எவ்வித களைப்புமின்றி ஆதரவாளர்களை பார்த்து இரண்டு கைகளை உயர்த்தி காட்டினார். இவர் வெளியே வந்ததும் வாசிலில் காத்திருந்த பத்திரிகையாளர்கள், டி.வி., காமிரா மேன்கள் பேட்டி எடுத்தனர். இவரது ரிலீசையொட்டி ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். 
ஜெயில் வாசலில் ஹசாரே பேட்டி: ஜெயில் வாசலில் நிருபர்களிடம் பேசிய ஹசாரே 64 ஆண்டுகள் கழிந்தும் நாம் இன்னும் முழுமையான சுதந்திரம் பெறவில்லை என்றார். தமது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் மக்களுக்கு நன்றி தெரிவித்து கொண்ட அவர் தொடர்ந்து நிருபர்களிடம் பேசுகையில்; மக்கள் அமைதி காக்க வேண்டும். ராம்லீலா மைதானத்தில் நடக்கும் இந்த போராட்டத்தில் மக்கள் அனைவரும் பங்கேற்க வரவேண்டும் என அழைப்பு விடுத்தார். காந்தி நடத்திய போருக்கு பின்னர் தற்போது 2 வது சுதந்திர போர் துவங்கி இருக்கிறது. இது இப்போது தீயாக எரிய துவங்கியிருக்கிறது. ஊழல் ஒழிக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். பின்னர் தொடர்ந்து அவர் ராஜ்காட் புறப்பட்டு சென்றார். அங்கு காந்திசமாதியில் அஞ்சலி செலுத்தி விட்டு மைதானம் நோக்கி செல்கிறார். இவர் செல்லும் வாகனத்தை தொடர்ந்து காத்திருந்த ஆதரவாளர்கள் இவர் பின் அணிவகுத்து செல்கின்றனர்.காந்தியவாதி அன்னா ஹசாரே, இன்று ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதத்தை துவக்குகிறார். 15 நாட்கள் உண்ணாவிரதம் இருப்பதற்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். இதையடுத்து, ஹசாரேவுடன் உண்ணாவிரதம் இருக்க, மக்கள் நாடுமுழுவதும் தயாராகி விட்டனர். ராம்லீலா மைதானத்தை நோக்கி ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வரத்துவங்கியுள்ளனர். மேலும், ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் அலை வேகமாக பரவுகிறது. டில்லியில் தடையை மீறி, உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற, காந்தியவாதி அன்னா ஹசாரேயை, போலீசார் கைது செய்து திகார் சிறையில் அடைத்தில் இருந்தே, மத்திய அரசின் இக்கட்டானநிலை வெளிச்சத்திற்கு வந்தது. அதை மாற்ற, மத்திய அரசு, ஹசாரே விடுவிப்பு அறிக்கையில் இருந்து, அடுத்தடுத்த சமரச நடவடிக்கைகளில் இறங்கியது. 40 மணி நேரம் நடந்த பேச்சுக்களுக்குப் பின், உண்ணாவிரதம் நடத்தப்படும் இடம் ராம்லீலா மைதானம் என்று முடிவானதுடன், சில அர்த்தமுள்ள நடைமுறைகளும் இரு தரப்பிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 


இதற்கான ஒப்பந்தம் நேற்று காலை தான் உறுதியானது. இருப்பினும், ராம்லீலா மைதானம் தயாராகாததால், நேற்றும் திகார் சிறையிலேயே ஹசாரே, உண்ணாவிரதத்தை தொடர்ந்து மேற்கொண்டார். ராம்லீலா மைதானத்தில் இன்று உண்ணாவிரதத்தை ஹசாரே முறைப்படி துவக்குகிறார். இதற்காக, இன்று திகார் சிறையிலிருந்து வெளியே வருகிறார். இத்தகவலை அவரது நெருங்கிய ஆதரவாளரான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். 
ஆர்.கே.சிங் பேட்டி: ஹசாரே உண்ணாவிரதம் குறித்து நேற்று டில்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த உள்துறை செயலர் ஆர்.கே. சிங் கூறியதாவது: போராட்டம் நடத்துவது குறித்து, ஹசாரே குழுவினருடன் டில்லி போலீசார் சுமுக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதில், அரசு தலையிடவில்லை. செப்டம்பர் 2ம் தேதி (15 நாட்கள்) வரை, ராம்லீலா மைதானத்தில், ஹசாரே உண்ணாவிரதம் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சில வழக்கமான நிபந்தனைகள் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளன. நிபந்தனைகள் என்றால், ஒலிபெருக்கிகளை பயன்படுத்தும் விஷயத்தில், ஏற்கனவே குறிப்பிடப்பட்டது பொருந்தும். டாக்டர்கள் பரிசோதனை நடத்துவதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைப்பாளர்களுக்கும், டில்லி போலீசுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு சிங் கூறினார்.

கிரண் பேடி: "உடல் நிலை ஒத்துழைக்கும் வரை ஹசாரே உண்ணாவிரதத்தை தொடர்வார்' என, அவரது குழுவில் உள்ள கிரண் பேடி தெரிவித்தார். அவர் நிருபர்களிடம் கூறுகையில், "ஹசாரேயின் உண்ணாவிரதம் காலவரையற்றது. சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டம் அல்ல. அவர் உடல்நிலை ஒத்துழைக்கும்வரை நீண்ட காலம் உண்ணாவிரதத்தை தொடர்வார். அவரது உடல் நிலை மோசமடைய அனுமதிக்கக்கூடாது' என்றார். "ஹசாரேவுக்கு மருத்துவ வசதி தேவைப்பட்டால், அதை கொடுக்கவேண்டும்' என, டாக்டர் நரேஷ் தெரஹான் குழுவினர் தெரிவித்தனர்.

தடை வாபஸ்: ஹசாரே முதலில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்த ஜே.பி. பார்க் உட்பட மத்திய டில்லி முழுவதும் பிறப்பித்து இருந்த தடை உத்தரவை, டில்லி போலீசார் நேற்று வாபஸ் பெற்றனர். ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரத ஏற்பாடுகளை கவனிப்பதற்காக, நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் ஈடுபட்டனர். போராட்டம் நடத்துவதற்கு வசதியாக அனைத்து ஏற்பாடுகளுடன் , நேற்று இரவுதான் மைதானம் தயாரானது.

ஊர்வலம்: திகார் சிறையிலிருந்து இன்று காலை வெளியே வரும ஹசாரே, தனது குழுவினருடன் ஊர்வலமாக ராம்லீலா மைதானம் செல்கிறார். இத் தகவலை, சுவாமி அக்னிவேஷ் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "ஹசாரேக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. அவர் நன்றாக இருக்கிறார். ரத்த அழுத்தம் நன்றாக உள்ளது. கடந்த மூன்று நாட்களாக அவர் உணவு எதையும் உட்கொள்ளவில்லை' என்றார்.

மக்கள் தயார்: இன்று ஹசாரேயுடன் உண்ணாவிரதம் இருப்பதற்காக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தயாராக உள்ளனர். இதற்கு நாடு முழுவதும் ஆதரவு தெரிவித்தும், ஊழலை எதிர்த்தும் அலை, நாடு முழுவதும் அதிகமாக பரவுகிறது. ஹசாரேயின் ஆதரவாளர்கள் அனைவரும் ராம்லீலா மைதானத்தை நோக்கி வாருங்கள் என, அவரது குழுவில் இடம்பெற்ற மேதா பட்னாகர் நேற்று அழைப்பு விடுத்தார். ஊழலுக்கு எதிராக நடத்தப்பட்ட ஜனநாயக எதிர்ப்பு உணர்வுக்கு முதல்கட்ட வெற்றியாக இது கருதப்படுகிறது. இதனால், பார்லிமென்ட் நடவடிக்கைகளுக்கு சட்டரீதியாக சிவில் அமைப்புகள் நடத்தும் எதிர்ப்பு உணர்வு தவறானதாகாது என்றும் நிலைநாட்டப்பட்டுள்ளது.


ஹசாரேயின் உண்ணாவிரத போராட்டம் நடக்கும் ராம்லீலா மைதானம், டில்லி ரயில் நிலையம் அருகில் உள்ளது.
 
Reactions:

0 comments :

Post a Comment