11:41:00
TAMIL100
புதுடில்லி: வலிமையான லோக்பால் மசோதா கோரி உண்ணாவிரதம் இருக்க முயன்று கைது செய்யப்பட்ட காந்தியவாதி அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக நாடு முழுவதும் எழுச்சி அலை காணப்படுகிறது. நாட்டின் பல்வேறு நகரங்களில் அவருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.
வலிமையான லோக்பால் மசோதாவை உருவாக்கக்கோரி, காந்தியவாதி அன்னா ஹசாரேவும் அவரது ஆதரவாளர்களும் உண்ணாவிரதப்போராட்டத்தை அறிவித்தனர். இதையடுத்து நேற்று காலை டில்லியில் அன்னா ஹசாரே கைது செய்யப்பட்டார். அவரைத்தொடர்ந்து அவரது ஆதரவாளர்களான அரவிந்த் கெஜ்ரிவால், சாந்தி பூஷன், கிரண்பேடி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். சாந்தி பூஷன் மற்றும் கிரண்பேடி ஆகியோர் நேற்று மாலை விடுதலை செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அன்னா ஹசாரே வடக்கு டில்லியில் உள்ள ஆபிசர்ஸ் மெஸ்சில் தங்க வைக்கப்பட்டார். அங்கு சென்ற நீதிபதிகள், ஹசாரேவிடம் சில உறுதிமொழிகள் கோர, அதை ஹசாரே மறுத்ததையடுத்து, அவரை 7 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டனர். அவருடன் கெஜ்ரிவாலும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், ஹசாரே கைது செய்யப்பட்டதைக்கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பல்வேறு நகரங்களில் ஹசாரேவுக்கு ஆதரவாக உண்ணாவிரதப்போராட்டம் நடந்தது. இதில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பல்வேறு நகரங்களில் வக்கீல்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.டில்லியில் இன்று மதியம் ஹசாரேவுக்கு ஆதரவாக ஆட்டோ டிரைவர்கள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளனர். இதே போல், டில்லியில் சுப்ரீம் கோர்ட் வளாகத்திலிருந்து இந்தியா கேட் வரை வக்கீல்கள் பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். மும்பையின் அந்தேரி பகுதியில் இன்று மாலை ஹசாரேவுக்கு ஆதரவாக தீப ஊர்வலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்., உயர்நிலைக்குழு: அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக நாடு முழுவதும் எழுந்துள்ள அலையைப்பார்த்து மிரண்டு போயுள்ள காங்., இன்று காலை உயர்நிலைக்குழு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். அன்னா ஹசாரே விவகாரத்தால் நேற்று முழுவதும் பார்லிமென்ட் முடங்கியுள்ள நிலையில், அது குறித்தும், ஹசாரேயின் கோரிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.
0 comments :
Post a Comment