தியானத்திற்குதவும் உணவு வகைகள்
சிந்தனைக் கலை: நீங்கள் தியானத்துக்கு உட்காரும் பொழுது, நண்பர்கள் அலுவலக வேலை, மாலையில் நண்பர்கள்-உறவினர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை இவைகளின் நினைவு உங்களைத் தொந்தரவு செய்து, உங்கள் மனதின் ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். திரும்பத் திரும்பப் பிடித்திழுத்து மனதை லட்சியத்தில் நிலை நிற்கச் செய்ய வேண்டும். உலகியல் எண்ணங்களை நீங்கள் புறக்கணித்து நிற்க வேண்டும். அவற்றைச் சற்றேனும் சட்டை செய்யாதீர்கள். இவ்வெண்ணங்களை வரவேற்காதீர்கள். இவ்வெண்ணங்களுடன் உங்களை ஒன்றுபடுத்தாதீர்கள். இவ்வெண்ணங்கள் எனக்குத் தேவையில்லை. இவற்றுடன் எனக்கு எவ்விதத் தொடர்பும் கிடையாது, என்று உங்களுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். இவ்வெண்ணங்கள் படிப்படியாக மறைந்து விடும். மனம் ஒரு குறும்புக்காரக் குரங்கு போன்றது. அதை அன்றாடம் ஒழுங்குபடுத்த வேண்டும். படிப்படியாக அது உங்களுக்குக் கீழ்ப்பணிந்து நடக்கும். நடைமுறை அனுபவத்தினால் தான் நீங்கள் தீய எண்ணங்களை அகற்றி நிறுத்தும் சக்தியைப் பெறுவீர்கள். நடைமுறைப் பயிற்சியினாலேயே நல் எண்ணங்களை நிலைத்து நிற்கச் செய்ய உங்களால் இயலும்.
சதா உங்கள் மனதை ஜாக்கிரதையுடன் கண்காணித்து வாருங்கள். விழிப்புடனிருங்கள். பொறாமை, கோபம், பகைமை, காமவிகாரம் முதலிய தீய உணர்ச்சிகளை மனதில் தோன்ற அனுமதிக்காதீர்கள். இந்தக் கறுத்த அலைகள் தியானம், ஞானம், சாந்தி இவற்றின் பெரும் பகைவர்கள். தூய நற்சிந்தனையைக் கொள்வதன் மூலம் இவற்றை உடனேயே அடக்கி நிறுத்துங்கள். பகவந் நாம உச்சாரணம், நற்செய்கை, தீய எண்ணங்களின் விளைவுகளான துன்பங்களின் மூல காரணத்தை ஆராய்தல், நான் யார் என்ற விசாரம், அல்லது தீய எண்ணங்களை அடக்குவதற்கு உறுதி பூண் இச்சா சக்தி முதலியவற்றைக் கொள்வதனால் நிலை நிறுத்தப்படும் நல்லெண்ணங்கள் மூலமாகத் தீயெண்ணஙககளைத் தகர்த்தெறிய வேண்டும். தூய்மை நிலையை அடைந்ததும் தீய எண்ணங்களை மனதில் முளைக்காது. வீட்டின் வாசலிலேயே பகைவனைத் தடுத்து நிறுத்துவது எளிதென்பதைப் போல் தீயஎண்ணம் தோன்றியவுடனேயே அடக்கி விடுவது எளிது. அதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். அதை வேர்விட அனுமதிக்காதீர்கள்.
ஆரம்பத்தில், தியானத்திற்கு உட்கார்ந்த உடனேயே எல்லாவிதத் தீய எண்ணங்களும் உங்கள் மனதில் தோன்றி நிற்கும். தூய எண்ணங்களைக் கொள்ள முயற்சிக்கும் நேரத்தில் இது ஏன் ஏற்படுகிறது? இதனால் சாதகர்கள் ஆத்மீக சாதனையைக் கைவிட்டு விடுகின்றனர். ஒரு குரங்கை நீங்கள் விரட்டியடிக்க முனைந்தால், அது உங்களைத் தாக்க முயலுகிறது. இதேபோல் பழைய தீய சம்ஸ்காரங்களும், தீய எண்ணங்களும், நல்லெண்ணங்கள் நல்ல சம்ஸ்காரங்கள் முதலியவைகளை நீங்கள் கொள்ள முயற்சிக்கும் போது, உங்களைப் பழிவாங்கும் எண்ணத்துடன் தாக்க பகைவன் உங்களை எதிர்த்து நிற்பதைப் போன்றதே இது. எதிர்ப்பு நியதி இயற்கையோடமைந்தது. மனிதனே! கொடுஞ் சித்தமுடையவனாக இராதே! தொன்று தொட்டே உங்கள் மனத்தொழிற்சாலையில் வாசம் செய்ய எங்களை நீங்கள் அனுமதித்து உள்ளீர்கள். அங்கு தங்க எங்களுக்கு சகலவித உரிமையும் உள்ளது. உங்கள் தீச்செய்கைகளில் எல்லாம் இதுவரையிலும் நாங்கள் உங்களுக்கு எவ்வளவு உதவி புரிந்துள்ளோம்! ஏன் எங்களைத் துரத்திவிடப் பார்க்கிறீர்கள்? நாங்கள் எங்கள் இடத்தைக் காலி செய்யமாட்டோம் என்று பழைய தீய எண்ணங்கள் உறுதியுடன் தெரிவிக்கின்றன. அதைரியமடையாதீர்கள். தீய எண்ணங்கள் தானாகவே தொலைந்து போகும். பிறகு அவை முளைத்தெழவே செய்யாது! நேரிடை எப்பொழுதும் எதிரிடையை வெல்லுகிறது. இதுவே இயற்கையின் நியதி. எதிரான தீயஎண்ணங்களால் நேரிய நல்லெண்ணங்களுக்கு எதிரில் நிற்க இயலாது. தைரியம் பயத்தை வெற்றி கொள்கிறது. சினத்தையும் முற்கோபத்தையும் பொறுமை தோற்கடிக்கிறது.
வெறுப்பை விருப்பு தோல்வியடையச் செய்கிறது. பேராசைத் தன்மையை பரிசுத்தத் தன்மை வெற்றி கொள்கிறது. தியானத்தின் பொழுது மேல்மனத்தில் ஒரு தீயஎண்ணம் தோன்றுகையில், நீங்கள் வருத்தம் சிறிது அடைகிறீர்கள் என்ற உண்மையே நீங்கள் ஆன்மீகத்தில் வளர்ச்சியடைகிறீர்கள் என்பதை உணர்த்துகிறது. அந்நாட்களில் நீங்கள் உணர்ந்தே எல்லாவித தீய எண்ணங்களுக்கும் இடம் கொடுத்தீர்கள். நீங்கள் அவற்றை வரவேற்று போஷித்தீர்கள். உங்களது ஆத்மீகப் பயிற்சிகளை விட்டுவிடாதீர்கள். பிடிவாதமுடையவர்களாகவும் இருங்கள். நீங்கள் வெற்றியையே அடைவீர்கள் என்பது திண்ணம். இடைவிடாது இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு ஜபத்தையும், தியானத்தையும் மந்த நிலையிலிருக்கும் சாதகனொருவன் கூடச்செய்து வருவானேயாகில் தன்னால் வியத்தக்க மாறுதலை அவன் காண்பான். இப்பொழுது இவனால் பயிற்சியை விடமுடியாது. ஒரே ஒரு நாள் தியானப்பயிற்சியை அவன் நிறுத்துவானாகிலும், அந்நாளில் தான் எதையோ இழந்து விட்டதைப் போன்று அவன் உணர்வான். அவனது மனம் முற்றிலும் வருத்தத்துடனிருக்கும்.
ஒரு பெரிய கண்ணாடியையும் அதன்முன் ஒரு ரொட்டித் துண்டையும் ஒரு நாய் முன் வைத்தால், கண்ணாடியில் ஏற்படும் அதன் பிரதிபிம்பத்தைப் பார்த்து நாய் குரைக்கிறது. அங்கு மற்றோர் நாய் இருப்பதாக அது தவறுதலாக நினைக்கிறது. அதேபோல ஜனங்களெல்லாரிடத்திலும் தனது மனக்கண்ணாடியின் மூலம் தன் பிரதி பிம்பத்தையே மனிதன் காண்கிறான். ஆனால் நாயைப்போன்று முட்டாள்தனமாக அவர்களையெல்லாம் தன்னிலிருந்து வேறுபட்டவர்களாகக் கருதி பகைமை, பொறாமை காரணமாகச் சண்டையிடுகிறான். நேர்மையுடன் கூடிய வாழ்க்கையை நீங்கள் நடத்துவீர்களேயானால் ஆழ்ந்த தியானத்தில் புக உங்களால் இயலும். நல்வாழ்க்கையை நீங்கள் நடத்துவீர்களேயானால், விவேகம் முதலிய பிற படிகளையும் உங்கள் மனதில் உருவாக்க நீங்கள் முயற்சி செய்யலாம். மனஒருமைப்பாட்டிற்கு நீங்கள் உங்கள் மனதை விருத்தி செய்யலாம். கடைசியில் தியானத்திலேயே நீங்கள் ஈடுபடலாம். ஒழுக்கமிகும் வாழ்க்கையில் அதிகமதிகம் ஈடுபடுவதாலும், அதிகமாகத் தியானிப்பதாலும் நிர்விகல்ப சமாதியில் திளைத்து நிற்பதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும். இவ்வரிய நிர்விகல்ப சமாதியால் ஜனன மரணச் சக்கரத்திலிருந்து விடுவித்து நித்தியானந்தம் அமர பதவிக்கு உங்களை அழைத்துச் செல்ல முடியும். நன்னடத்தை நியதிகளைக் கைக்கொள்ளாத ஒருவனுடைய மனதில் செய்யப்படும் தியானப் பயிற்சி மோசமான அஸ்திவாரத்தின்மேல் கட்டப்படும் வீட்டை ஒக்கும். மணலின் மீது நீங்கள் வீட்டைக் கட்டலாம். ஆனால் அது கட்டாயம் கீழே விழுந்து விடும். ஒழுக்க அடிப்படையில்லையெனில் வருடக்கணக்காக நீங்கள் தியானத்திலீடு பட்டாலும் ஒரு பயனும் ஏற்பட முடியாது. நீங்கள் வீழ்ச்சியுறுவது திண்ணம். எனவே, ஒழுக்கப்பயிற்சியின் மூலமாக ஏற்படும் மனத்தூய்மை, தியானம், சமாதியில் வெற்றி பெற எண்ணும் ஒருவனுக்கு இன்றியமையாதது. தியானப் பயிற்சியிலீடுபடுவதற்கு முன்னால் நீங்கள் மிகத் தேவையான நேரிய நல்வாழ்க்கையில் நிற்க முயல வேண்டும். உங்களிடம் நல்லறிவு தோன்றி நிற்கவேண்டும். அப்பொழுது தான் நீங்கள் தியானத்தில் வெற்றி பெறுவீர்கள். உண்மையான பயிற்சியைவிட மனதை தியானத்திற்குத் தயார் செய்வதில் தான் காலதாமதம் அதிகமாகிறது. எதிரி எண்ணங்களை விரட்டியடியுங்கள். சதா நேரிடை எண்ணங்களைக் கொள்ளுங்கள். நேரிடை எதிரியை வெல்லுகிறது. நேரிடையில் நிற்கும் பொழுது நீங்கள் நன்கு தியானிக்க முடியும்.
மனம் இடையறாது புலப்பொருள்களில் வசிக்கும் பொழுது இவ்வண்டம் உண்மையானது என்ற எண்ணம் அதிகரிப்பது சத்தியமே. மனம் பரம்பொருளை எப்பொழுதும் நாடி நின்றால் உலகம் ஒரு கனவாகத் தோன்றுகிறது. மனதின் பயனற்ற பல சங்கல்பங்களிலிருந்தும் நீங்கள் உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். இடைவிடாத ஆத்ம விசாரத்தில் ஈடுபடுங்கள். இடைவிடாத என்ற பதத்தைக் கவனியுங்கள். இது மிகவும் முக்கியமானது. அப்பொழுது தான் அத்மீக ஞானம் உருவாகும். சிதாகாசத்தில் ஞானசூரியன் உதயமாவான். தேத்தாங்கொட்டையினால் கலங்கிய நீர் தெளிவடைவது போல் வாசனைகளும் பொய்யான சங்கல்பங்களும் நிறைந்த மனதைப் பிரம்ம சிந்தனையினால் தெளியவைக்க வேண்டும். அவ்வமயமே உண்மையான ஆத்மதரிசனம் ஏற்பட வழி பிறக்கும். இரண்டு முயல்களைத் துரத்திச் செல்லும் மூடமனிதனால் ஒன்றையும் பிடிக்க முடியாததுபோல், எதிரியான இரண்டு எண்ணங்களின் பின் ஓடும் தியானியால் வெற்றியடைய முடியாது. பத்து நிமிடங்களுக்குத் தெய்வீக எண்ணங்களும் பிற்பாடு உலகியல் எண்ணங்களும் ஒருவனிடம் தோன்றி நிற்குமானால், தெய்வீக உணர்வைப் பெறுவதில் அவன் வெற்றி அடையமாட்டான். நீங்கள் ஒரே முயலையே பலமாகப் பின் தொடர்ந்து செல்ல வேண்டும். அதை நீங்கள் பிடிப்பது உறுதி. சதா சர்வகாலமும் நீங்கள் தெய்வீக எண்ணங்களையே கொண்டு விளங்க வேண்டும். அப்பொழுதுதான் கடவுளை விரைவிலேயே காணும் வாய்ப்பைப் பெறுவீர்கள். உப்பு அல்லது சர்க்கரையினால் தண்ணீரை நீங்கள் பூரிக்கச் செய்வது போல் கடவுள், பிரம்மனை பற்றிய எண்ணங்களினாலும், தெய்வீகப் புகழ், சீரிய உணர்ச்சியூட்டும் ஆன்மீக எண்ணங்களினாலும் மனதைப் பூரிக்கச் செய்ய வேண்டும். அப்போது தான் நிரந்தரமாக நீங்கள் தெய்வீக உணர்வில் நிலைநிறுத்தப்படுவீர்கள்.
நிதித்தியாசனத்தில் நீங்கள் ஸ்வஜாதீய விருத்தி பாவத்தை விருத்தி செய்ய வேண்டியதிருக்கும். இரத்தப் பெருக்கைப் போன்று தெய்வீக சாந்நித்தியத்தின் எண்ணங்களை ஏற்படுத்துங்கள். விஜாதீய விருத்தி பாவத்தை திரஸ்காரம் செய்யுங்கள். பொருளின் எண்ணங்களை விட்டொழியுங்கள். விவேகம், விசாரம் என்ற சாட்டையினால் அவைகளை விரட்டியடியுங்கள். ஆரம்பத்தில் தொந்தரவு சிறிது இருக்கும். உண்மையிலேயே அது ஒரு முயற்சியாகும். உங்கள் சக்தி பெருகப் பெருக, பரிசுத்தத்தன்மையிலும், பிரம்ம சிந்தனையிலும் நீங்கள் விருத்தியடைகையில் சாதனை எளிதாகிறது. ஒற்றுமையில் ஓங்கிய வாழ்க்கையில் நீங்கள் இன்புறுகிறீர்கள்; ஆத்மாவிலிருந்து சக்தியடைகிறீர்கள். மனம் ஒன்றித்தபின் உள்சக்தி வளருகிறது. தியானத்தின் பொழுது உங்களால் எவ்வளவு நேரம் உலக எண்ணங்களிலிருந்து அகன்று நிற்க முடிகிறது என்பதைக் கவனியுங்கள். மிக கவனமாக மனதைக் கண்காணியுங்கள். 20 நிமிடங்களுக்கு அது தனித்திருக்குமேயானால் 30 அல்லது 40 நிமிடங்களுக்கு அந்நேரத்தை நீளச்செய்து 2 அல்லது 3 மணி நேரங்களுக்குக் காலவளவை உயர்த்த முயற்சியுங்கள். மறுபடியும் மறுபடியும் மனத்தைத் தெய்வீக எண்ணங்களால் நிரப்புங்கள். இடைவிடாத பயிற்சியினால் மனதைக் கட்டுப்படுத்த முடியும். அதை நீங்கள் தெய்வீக எண்ணங்களால் நிரப்புதல் அவசியம். உங்கள் முயற்சிகளைத் தளர்த்துவீர்களேயானால், வீண் எண்ணங்கள் உடனேயே புகுந்துவிடும். இடைவிடாத பயிற்சியினால் மனதை எளிதிலே கட்டுப்படுத்த முடியும். எளிய உணவுடன் கூடிய இடைவிடாத தியானத்திலேயே சமாதி ஏற்பட வழி பிறக்கும். உலைகளத்தில் ஒரு இரும்புத்துண்டை வையுங்கள். அது தீயைபோன்று சிவப்பாகிறது. தீயிலிருந்து அதை நீக்கி விடுங்கள். அது செந்நிறத்தை இழக்கிறது. அதை செந்நிறமாகவே எப்பொழுதும் வைத்திருக்க விரும்பினால், தீயிலேயே நீங்கள் அதை எப்பொழுதும் வைத்திருக்க வேண்டும். இதுபோன்றே, பிரம்ம ஞானத்தீயினால் மனத்தைப் பாதுகாக்க விரும்பினால், இடைவிடாத, ஆழ்ந்த தியானத்தினால் பிரம்மஞானத் தீயுடன் அதை எப்பொழுதும் தொடர்பு கொள்ளச் செய்ய வேண்டும். இடைவிடாத பிரம்ம ஞானத்தை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். பிறகு நீங்கள் சகஜ அவஸ்தையை அடைவது உறுதி.
0 comments :
Post a Comment