அதிசயம்
இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை!
கணவன், மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் என தென் தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்த ஒரு எளிய குடும்பம் அது. அது ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பம். ஒரு காலத்தில் ஓகோவென்று இருந்து, உறவுக்காரர்களின் சூழ்ச்சி மற்றும் தவறான குடும்ப நிர்வாகம் ஆகியவற்றால், ஒரு வேளை சோற்றுக்கே கஷடப்படும் அளவிற்கு பிற்காலத்தில் வந்துவிட்டனர். வசதியே இல்லாம வாழ்ந்துடலாம். ஆனா வசதி வந்துட்டு மறுபடியும் போனா அதை தாங்கிக்க யாராலையும் முடியாது. மூன்று வேளை சாப்பாடு என்பது அவர்கள் வீட்டில் இல்லை. இரண்டு வேளை தான். அதுவும் பெரும்பாலும் பழைய சோறு மற்றும் கூழ் தான். குழந்தைகளை அவர்கள் விரும்பும் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க வசதியில்லை. ஆங்காங்கு கிடைத்த நகராட்சி பள்ளிகளில் தான் படிக்க வைக்க முடிந்தது.
அந்த குடும்பத்தில் இரண்டாவது வாரிசு அவன்.... கான்வென்ட்டில் படிக்கவேண்டும் என்கிற ஆசை இருந்தும் கார்பரேஷன் பள்ளி ஒன்றில் தான் 6 வது சேர்க்க முடிந்தது. ஆசையோடு பள்ளிக்கு கிளம்பும் மகனுக்கு சீருடை கூட வாங்கி கொடுக்க வழியில்லாது.... கணவரின் நல்ல வேட்டி ஒன்றை எடுத்து கத்திரித்து, அதில் சட்டை தைத்து தருகிறாள் மனைவி. மகனும் ஆவலோடு பள்ளிக்கு செல்கிறான். இப்படியாக வறுமையின் போராட்டங்களுக்கு நடுவே பள்ளி படிப்பு ஒரு வழியாக முடிகிறது.
கல்வி மீதிருந்த ஆர்வத்தால் அதற்கு பிறகு ராமகிருஷ்ணா கல்லூரியில் பட்டபடிப்பு சேர்கிறான். படிக்கும் காலத்தில் தங்களது உறவினர் வைத்திருந்த ஹோட்டல் ஒன்றில் மாலை வேளைகளில் பில்போடும் வேலை கிடைத்தது. காலை கல்லூரி. மாலை ஓட்டல் வேலை என்று நகர்ந்தது வாழ்க்கை.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கனவு... ஏக்கம்... ! ஆசைக்கு என்று இல்லாமல் தேவைக்கு மட்டுமே வாழ்க்கை வாழ வேண்டிய ஒரு நிர்பந்தம்.
கல்லூரி படித்து முடித்த பின்பு, லெதர் கம்பெனி ஒன்றில் மாதம் ரூ.850/- சம்பளத்தில் சூப்பர்வைசராக வேலை கிடைத்தது. அதுவும் சில ஆயிரங்கள் செலவழித்த பின்னர் தான்.
"ஏதாவது நிச்சயம் சாதிக்க வேண்டும்" என்ற லட்சியத்துக்கிடையே பலப் பல வண்ணக் கனவுகளுடன், வாழ்க்கை துவங்குகிறது அந்த இளைஞனுக்கு. அதற்கு பிறகு திருமணம். ஒரு சிறிய அறையில் ஒண்டுகுடித்தனத்தில் தான் இல்லறம் நடக்கிறது. வறுமையில் இருந்தாலும் அவன் மகிழ்ச்சியோடு இருந்த நாட்கள் இவை தான். கணவன் மனைவி அன்பின் விளைவாக குழந்தை ஒன்று பிறக்கிறது. ஆண்டுகள் சில உருண்டோடுகின்றது. மனைவி அடுத்த குழந்தைக்கான கருவை வயிற்றி சுமந்து வருகிறாள்.
இந்நிலையில் ஒரு நாள், காலையில் கண் விழித்தபோது வலது புறக் கண்ணில் பார்வை மிக மிக மங்கலாக தெரிகிறது. எதிரே இருப்பது எதுவும் சரியாக தெரியவில்லை. (ஏற்கனவே இவருக்கு MYOPIA - கிட்டப் பார்வை உண்டு. அதற்காக கண்ணாடி அணிந்திருந்தார்). கண்ணுக்குள் ஏதோ ஒரு வித வலி. அருகே உள்ள அரசு கண் மருத்துவமனைக்கு ஓடுகிறார். "பயப்படாதீங்க.... ஒன்னும் இல்லே. ட்ராப்ஸ் எழுதித் தர்ரேன். அதை போட்டுட்டு வாங்க... சரியாகிவிடும்." என்று கூறுகிறார். ஆனால், ஒரு சில நாட்கள் அதை போட்டும் எந்தப் பயனும் இல்லை. நாளாக நாளாக பார்வை போய்கொண்டே இருக்கிறது. இவரது தந்தைக்கு, மறைந்த பேச்சாளர் வலம்புரி ஜானை நன்கு தெரியும். அவரது பரிந்துரையின் பேரில், நகரிலேயே பெரிய கண் மருத்துவமனைக்கு தனது மகனை அழைத்து செல்கிறார். அங்கு தலைமை மருத்துவர் கண்களை பரிசோதிக்கிறார். "உங்களுக்கு கண்களில் வந்திருப்பது RETINAL HAEMORRHAGE என்னும் ஒரு வித நோய். அதாவது உங்கள் கண்ணுக்குள் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை நிறுத்த முடியாது. தானாக நின்றால் தான் உண்டு. இது ஏன் வருகிறது எப்படி வருகிறது இதெல்லாம் தெரியாது." என்கிறார். (1989 இல் நடக்கும் விஷயம் இது. இப்போதுள்ளது போல அப்போது கண் மருத்துவத்தில் நவீன வசதிகள் எல்லாம் கிடையாது.).
இவர் கண்கள் கலங்க...."இதுக்கு என்ன தான் வழி சார்?" என்று கேட்க, அதற்க்கு மருத்துவர் "இப்போவே ஒரு ப்ளைண்ட் ஸ்கூலில் நீங்க சேருவது தான் நல்லது. ஏன்னா... இந்த பிரச்னை உங்களோட இடது கண்ல கூட ஸ்டார்ட் ஆயிடுச்சு. சீக்கிரம் உங்களோட இடது கண் பார்வையும் போய்விடும். இதுக்கு ஒரே வழி... பார்வை இல்லாத சூழ்நிலையை எதிர்கொள்ள பழகிக்கொள்வது தான். Rest is with God" என்று கூறுகிறார்.
இவருக்கு ஒன்றுமே புரியவில்லை. வாழ்க்கையே ஒரு கணம் இருண்டுவிட்டது போல உணர்கிறார். வீட்டிற்கு வருகிறார். அக்கறையுடனும் கவலையுடனும் விசாரிக்கும் மனைவியிடம் கூட இவருக்கு உண்மையை சொல்ல தைரியம் இல்லை. என்ன சொல்வது? எதை சொல்வது? "கொஞ்ச நாள் மருந்து போட்டுட்டு வந்தா குணமாயிடும்னு சொல்லியிருக்கிறார்" என்று சும்மா ஒப்புக்கு சொல்லிவைத்துவிட்டு படுக்கையில் சாய்கிறார். தூக்கம் வரவில்லை. எப்படி வரும்? இன்னும் கொஞ்ச நாள்ல ரெண்டு கண்லயும் பார்வை போய்விடும்னா எப்படி தூக்கம் வரும்? எல்லாத்தையும் ஆண்டு அனுபவித்துவிட்டு ஒரு 70 வயதுக்கு மேல் இப்படி ஒரு பிரச்னை வந்தாக் கூட பரவாயில்லே. தாங்கிக்கலாம். ஆனா, வாழ்க்கையே இப்போ தான் ஆரம்பிச்சிருக்கு. இந்த சூழ்நிலைல இப்படி ஒரு பிரச்னை வந்தா யாரால தாங்கிக்க முடியும்?
இரவு முழுதும் யோசிக்கிறார். "நமக்கு மட்டும் ஏன் இப்படி? அப்படி என்ன பாவம் செஞ்சோம்?" எண்ணங்கள் பலவாறாக ஓடுகிறது.
திக்கற்றோருக்கு அந்த தெய்வம் தானே துணை? கடைசியில், இறைவனின் கால்களைப் பற்றுவது தான் ஒரே வழி என்று முடிவுக்கு வருகிறார். இவருக்கு சுவாமி ஐயப்பன் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு. இவரது இஷ்ட தெய்வம் என்றால் அது ஐயப்பன் தான். மனம்விட்டு அடிக்கடி ஐயப்பனிடம் பேசுவது இவரது வழக்கம்.
எனவே, தன் வீட்டில் உள்ள ஐயப்பன் படத்தின் முன்பு நின்று ஐயப்பனிடம் மனமுருகி பேசுகிறார். "நான் என்ன பாவம் செய்தேன் ஐயப்பா? எனக்கு ஏன் இப்படி ஒரு பெரிய தண்டனை? வாழ்க்கையே இனிமே தான் ஆரம்பிக்கப்போகிற ஒரு சூழ்நிலைல இப்படி ஒரு தண்டனை எனக்கு ஏன்? உன்னைத் தவிர எனக்கு வேறு யாரு இருக்கா? நீ தான் என்னை காப்பத்தனும்..." இப்படி பலவாறாக புலம்புகிறார்.
கடைசியில் ஒரு முடிவுக்கு வருகிறார். அப்போதெல்லாம் 'டிக் 20' என்ற ஒரு வகை பூச்சி மருந்து ரொம்ப பேமஸ். அதை வாங்கி வைத்துக்கொள்கிறார்.
நேரே ஐயப்பன் முன்பு போய், "பார்வையில்லாமல் இந்த உலகத்தில் வாழ்வதை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. உனக்கு ஒரு வாரம் டயம் தருகிறேன். அதற்குள் என்னுடைய இந்த பிரச்னை முடிவுக்கு வரவேண்டும். இல்லையெனில் இந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு உயிர் துறப்பேன். நிச்சயமாக" என்று அந்த இறைவனுக்கு கெடு வைக்கிறார்.
சரி... பூச்சி மருந்தை சாப்பிட்டும் சாகலேன்னா என்ன செய்றது? (சில பேர் அந்த பூச்சி மருந்தை குடித்தும் பிழைத்திருக்கிறார்களாம்.) எனவே முன்னெச்சரிக்கையாக அரை பாட்டில் தூக்க மாத்திரைகளையும் வாங்கி வைத்துக்கொள்கிறார். தூக்க மாத்திரைகளை முதலில் சாப்பிட்டுவிட்டு பின்னர் பூச்சி மருந்தை குடிக்கலாம் என்று பிளான்.
ஐயப்பனுக்கு ஒரு வாரம் கெடு வைத்தாயிற்று. இவர் கெடு விதித்த நாட்கள் துவங்குகிறது. அதாவது கவுண்டிங் வித் டெத் ஸ்டார்ட்ஸ். மருத்துவத்துக்கும் இறைவனுக்கும் இவர் வைத்துள்ள போட்டிக்கான விடை தெரிய இன்னும் ஒரு வாரமே உள்ளது.
இவரை பொறுத்தவரை எப்படியும் ஒரு வாரம் கழித்து சாகப் போகிறோம் என்று முடிவுக்கு வந்துவிடுகிறார். ஏனெனில், நகரிலேயே தலை சிறந்த கண் மருத்துவர் கூறிய வார்த்தைகளையும் மீறி தனக்கு பார்வை வரும் என்கிற நம்பிக்கை இவருக்கு இல்லை. இருப்பினும். பாறையில் துளிர்விடும் வேரைப் போல ஒரு ஓரத்தில் சின்ன நம்பிக்கை இருக்கிறது. "அந்த ஹரிஹரசுதன் நம்மை கைவிட மாட்டான்" என்று.
இந்த இடைப்பட்ட ஒரு வாரம், இவர் மிகவும் விரும்பிய ஆடைகளை வாங்கி அணிந்துகொள்கிறார். ஆசைப்பட்ட உணவு வகைகளை வாங்கி சாப்பிடுகிறார். குழந்தையை கொஞ்சுகிறார். மரணத்தை அடுத்த வாரம் சந்திக்கப்போகும் ஒருவனுடைய மனநிலையில் இருந்துகொண்டு அனைத்தையும் செய்கிறார். இவர் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார் என்று அவரது மனைவிக்கோ அல்லது வேறு எவருக்குமே தெரியாது. இந்த ஒரு வாரமும் ஒவ்வொரு நாளும் தூங்கி விழித்த பின்பு, ஐயப்பன் படத்தை ஒரு சில வினாடிகள் பார்த்துவிட்டு தான் மறு வேலை பார்ப்பதை வழக்கமாக வெச்சிக்கிறார்.
7 வது நாள் - ஞாயிற்றுக் கிழமை படுக்கச்செல்லும் முன் நினைத்துக்கொள்கிறார். "இது தான் நமது கடைசி தூக்கமோ... ஒருவேளை...ஹூம்... !" என்று.
மறுநாள் திங்கட்கிழமை காலை எழுந்திருக்கிறார். வழக்கம்போல ஐயப்பன் படத்தை பார்க்கிறார். ஆனால் இம்முறை பார்வையில் ஏதோ வித்தியாசம். வித்தியாசம் அல்ல. மிகப் பெரிய முன்னேற்றம். எந்த கண்ணில் பிரச்னை என்று தற்கொலை முடிவிற்கு போனாரோ அந்தக் கண்ணில் பார்வை முன்னை விட பிரகாசமாக தெரிகிறது. ஒரு கணம் இது கனவா நிஜமா? தன்னை கிள்ளி பார்த்துக்குறார். நிஜம் தான். "ஐயப்பாஆஆஆஆஆஆஆ............." கதறுகிறார் ஐயப்பன் முன்பு. வேறு வார்த்தைகள் வரவில்லை.
உடனே தான் மருத்துவமனைக்கு ஓடுகிறார். அதே மருத்துவர் இவரது கண்களை பரிசோதித்து ஒரு கணம் ஷாக் ஆயிடுறார். "இந்த கண்ணையா நான் இதுக்கு முன்னாடி டெஸ்ட் பண்ணினேன்? எல்லாம் ரொம்ப கரெக்டா இருக்கே இப்போ. ஒன்னுமே புரியலியே எனக்கு?" என்று தனது அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறார். இடது கண்ணை டெஸ்ட் செய்கிறார். அங்கு கூட அந்த ரத்தக் கசிவு இருந்ததற்கான சுவடே தெரியவில்லை.
"தம்பி உன் ரெண்டு கண்ணும் நல்லா பர்ஃபெக்டா இருக்கு. இதுக்கு முன்னாடி டெஸ்ட் பண்ணப்போ எங்கே தப்பு நடந்துச்சுன்னு தெரியலே..." மருத்துவர் நடந்தது என்னவென்று புரியாமல் சம்பிரதாயமாக சில வார்த்தைகள் கூறுகிறார்.
ஆனால் நடந்தது என்னவென்று அந்த ஐயப்பனுக்கு தானே தெரியும்!!!!!!!!!!!!!!!!!!!!!
இவரோட வாழ்க்கையில் எப்படி இந்த அதிசயம் சாத்தியமாச்சு? ஒரு பட விழாவுல சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்னது தான் நினைவுக்கு வருகிறது.... "நாம் எந்த தெய்வத்தை வணங்கினாலும்... அந்த தெய்வத்தின் மீது நாம் எந்தளவு நம்பிக்கை வைக்கிறோமோ அந்தளவு அந்த தெய்வத்துக்கு சக்தி இருக்கும்! So, கடவுள் மேல் நீங்கள் வைக்கும் நம்பிக்கை அசைக்க முடியாததாக இருக்கவேண்டும்!" என்று.
(மேற்படி நண்பருக்கு அந்த சூழ்நிலையிலும் ஐயப்பன் மேல இருந்த அந்த பக்தி - அந்த சின்ன நம்பிக்கை - மிகப் பெரிய விஷயமுங்க. அதை நினைவுல வெச்சிகோங்க!)
என்ன நம்புறதுக்கு கஷ்டமா இருக்கா? அட... நம் கண் முன்னே வாழ்ந்துவரும் நேரடி சாட்சிங்க இவர். நம்பலேன்னா எப்படி?
அன்றைக்கு ஐயப்பனால் காப்பற்றப்பட்ட இவர் அதற்கு பிறகு வாழ்க்கையில் சோதனைகளை, அவமானங்களை சந்திக்காமல் இல்லை. ஆனால், கடவுள் நம்முடன் இருக்கிறார். அவரது பரிபூரண கருணை நமக்கு என்றும் இருக்கிறது என்ற நம்பிக்கையில், சோதனைகளை எல்லாம் சாதனைகளாக்கி, அவமானங்களை எல்லாம் அவன் இட்ட உரங்களாக கருதி, அல்லும் பகலும் அயராது உழைத்து, இன்று மிகப் பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தை நிறுவியிருக்கிறார்.
MADURAI APPU GROUP OF RESTAURANTS, R C GOLDEN GRANITES, SHRI SABARI BHAVAN, BLITZ BAKERY & CONFECTIONARY, BARBEQUE BISTRO என்று சுமார் அரை டஜனுக்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்களின் முதன்மை நிர்வாக இயக்குனர் மற்றும் நிறுவனர் ஆர்.சந்திரசேகர்.
ரூ.850/- மாதச் சம்பளத்தில் வாழ்க்கையை துவங்கிய இவர் இன்று பல கோடிகளை ஒவ்வொரு மாதமும் அனாயசமாக TURN-OVER செய்யும் நிறுவனங்களுக்கு சொந்தக்காரர்.
விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும், அயராத உழைப்பும் கூடவே கொஞ்சம் தெய்வ நம்பிக்கையும் இருந்தால் எப்பேற்ப்பட்ட சாதனையும் சாத்தியமே என்று கூறும் இவரது வரலாறு நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.
எப்படி இவற்றை இவர் சாதித்தார்? அதற்கு இவர் கண்ட வழிமுறைகள் என்ன? உழைத்த விதம் என்ன? பட்ட அவமானங்கள் என்ன? சந்தித்த துரோகங்கள் என்ன? அனைத்தையும் விரிவாக உங்களிடம் பகிர்ந்துகொள்கிறார்.
விரைவில் தனிபதிவாக... ONLYSUPERSTAR.COM தளத்தில்...
நன்றி :
0 comments :
Post a Comment